புனித பெரிய ஆல்பர்ட் – ஆயர், மறைவல்லுநர்
முதல் வாசகம்
அவர்கள் அருந்த, அறிவுக்கூர்மை எனும் உணவை ஞானம் கொடுக்கும்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 15: 1-6
ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள் இவற்றையெல்லாம் செய்வார்கள்; திருச்சட்டத்தைக் கற்றுத் தேர்ந்தவர்கள் ஞானத்தை அடைவார்கள். தாய் போன்று ஞானம் அவர்களை எதிர்கொள்ளும்; இளம் மணமகள் போல் அவர்களை வரவேற்கும்.
அறிவுக்கூர்மை எனும் உணவை அவர்கள் அருந்தக் கொடுக்கும்; ஞானமாகிய நீரைப் பருக அளிக்கும். அவர்கள் அதன்மீது சாய்ந்து கொள்வார்கள்; விழமாட்டார்கள்; அதைச் சார்ந்து வாழ்பவர்கள் இகழ்ச்சி அடையமாட்டார்கள். அடுத்திருப்பவருக்கு மேலாக அது அவர்களை உயர்த்தும்.
சபை நடுவில் பேச நாவன்மை நல்கும். அவர்கள் அக்களிப்பையும் மகிழ்ச்சியின் முடியையும் கண்டடைவார்கள்; நிலையான பெயரை உரிமையாக்கிக் கொள்வார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 119: 9-10. 11-12. 13-14 . (பல்லவி: 12b)
பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.
9இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ?
10முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலகவிடாதேயும். – பல்லவி
11உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.
12ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும். – பல்லவி
13உம் வாயினின்று வரும் நீதித்தீர்ப்புகளை எல்லாம் என் இதழால் எடுத்துரைக்கின்றேன்.
14பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவது போல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திப 16: 14b காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் திருமகன் கூறியதை ஏற்றுக்கொள்ளுமாறு எங்கள் உள்ளத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
புதியவையும் பழையவையும்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 47-52
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: “விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளர் இடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.”
“இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?” என்று இயேசு கேட்க, அவர்கள் “ஆம்” என்றார்கள்.
பின்பு அவர், “ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்” என்று அவர்களிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.