பொதுக்காலம் 34ஆம் வாரம் – திங்கள்
முதல் வாசகம்
கிறிஸ்துவின் பெயரையும் அவருடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்தனர்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 14: 1-5
யோவான் என்னும் நான் சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன். அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேர் அதனுடன் இருந்தனர். பின்பு விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். அது பெரும் வெள்ளத்தின் இரைச்சல் போலும் பேரிடி முழக்கம் போலும் யாழை மீட்டுவோர் எழுப்பும் இசை போலும் ஒலித்தது.
அந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேரும் அரியணை முன்னிலையில் நான்கு உயிர்களுக்கும் மூப்பர்களுக்கும் முன்பாகப் புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள். மண்ணுலகிலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்ட அவர்களைத் தவிர வேறு யாராலும் அந்தப் பாடலைக் கற்றுக்கொள்ள இயலவில்லை. அவர்கள் பெண்களோடு சேர்ந்து தங்களைக் கறைப்படுத்திக் கொள்ளாமல் கற்பைக் காத்துக் கொண்டவர்கள்.
ஆட்டுக்குட்டி சென்ற இடம் எங்கும் அதைப் பின்தொடர்ந்தவர்கள்; கடவுளுக்கும் ஆட்டுக் குட்டிக்கும் உரிய முதற்கனியாக மனித குலத்திலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்டவர்கள். அவர்களது வாயினின்று பொய்யே வந்ததில்லை; ஏனெனில் அவர்கள் மாசற்றவர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 24: 1-2. 3-4ab. 5-6 . (பல்லவி: 6a)
பல்லவி: ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.
1மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடை யவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள் மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. – பல்லவி
3ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
4abகறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். – பல்லவி
5இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 24: 42a, 44
அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
வறுமையில் வாடிய ஒரு கைம்பெண் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-4
அக்காலத்தில்
இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார். வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.
அவர், “இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும் விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.