பொதுக்காலம் 34ஆம் வாரம் – செவ்வாய்
முதல் வாசகம்
உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 14: 14-20
சகோதரர் சகோதரிகளே,
யோவான் என்னும் நான் ஒரு வெண் மேகத்தைக் கண்டேன். அதன்மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் வீற்றிருந்தார். அவரது தலையில் பொன் முடியும் கையில் கூர்மையான அரிவாளும் காணப்பட்டன.
மற்றொரு வானதூதர் கோவிலிலிருந்து வெளியே வந்து, மேகத்தின்மீது வீற்றிருந்தவரை நோக்கி, “உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது; மண்ணுலகம் என்னும் பயிர் முற்றிவிட்டது” என்று உரத்த குரலில் கத்தினார். உடனே மேகத்தின்மீது வீற்றிருந்தவர் மண்ணுலகெங்கும் தமது அரிவாளை வீசி அறுவடை செய்தார்.
மற்றொரு வானதூதரும் விண்ணகத்தில் உள்ள கோவிலிலிருந்து வெளியே வந்தார். அவரிடமும் கூர்மையான அரிவாள் ஒன்று இருந்தது. நெருப்பின் மேல் அதிகாரம் கொண்டிருந்த இன்னுமொரு வானதூதர் பலிபீடத்திலிருந்து வெளியே வந்தார். அவர் கூர்மையான அரிவாளை வைத்திருந்தவரிடம், “உமது கூர்மையான அரிவாளை எடுத்து மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்திடும்; ஏனெனில் திராட்சை கனிந்துவிட்டது” என்று உரத்த குரலில் கூறினார். ஆகவே அந்த வானதூதர் மண்ணுலகின் மீது தம் அரிவாளை வீசி மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்தார்; கடவுளின் சீற்றம் என்னும் பெரிய பிழிவுக் குழியில் அவற்றைப் போட்டார். நகருக்கு வெளியே இருந்த அந்தப் பிழிவுக் குழியில் அவை மிதிக்கப்பட்டன. அந்தப் பிழிவுக் குழியிலிருந்து இரத்த வெள்ளம் ஏறத்தாழ இரண்டு மீட்டர் ஆழம், முந்நூறு கிலோ மீட்டர் தொலைக்குப் பாய்ந்தோடியது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 96: 10. 11-12. 13 . (பல்லவி: 13b)
பல்லவி: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க ஆண்டவர் வருகின்றார்.
10வேற்றினத்தாரிடையே கூறுங்கள்; ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். – பல்லவி
11விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.
12வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். – பல்லவி
13ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திவெ 2: 10
அல்லேலூயா, அல்லேலூயா! இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
கோவிலின் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இடிக்கப்படும்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-11
அக்காலத்தில்
கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். இயேசு, “இவற்றை யெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்றார்.
அவர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், “நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே அவர்’ என்றும், ‘காலம் நெருங்கி வந்துவிட்டது’ என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது” என்றார்.
மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: “நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளைநோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
Super Bro.👍
Very Nice 🙏