பொதுக்காலம் 33ஆம் வாரம் – சனி
முதல் வாசகம்
மண்ணுலகில் வாழ்வோர்க்குத் தொல்லை கொடுத்த இரு சாட்சிகள்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 11: 4-12
சகோதரர் சகோதரிகளே,
மண்ணுலகின் ஆண்டவர் திருமுன் நிற்கும் இரண்டு ஒலிவ மரங்களும் இரண்டு விளக்குத் தண்டுகளுமே அந்த இரு சாட்சிகள். யாராவது அவர்களுக்குத் தீங்கு இழைக்க விரும்பினால் அவர்களது வாயிலிருந்து தீ கிளம்பி அந்தப் பகைவர்களைச் சுட்டெரித்துவிடும். அவர்களுக்குத் தீங்கு இழைக்க விரும்புவோர் இவ்வாறு கொல்லப்படுவது உறுதி. தாங்கள் இறைவாக்கு உரைக்கும் காலத்தில் மழை பொழியாதவாறு வானத்தை அடைத்துவிட அவர்களுக்கு அதிகாரம் உண்டு; தாங்கள் விரும்பும் பொழுதெல்லாம் தண்ணீரை இரத்தமாக மாற்றவும், மண்ணுலகை எல்லா வகை வாதைகளாலும் தாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு.
அவர்கள் சான்று பகர்ந்து முடித்தபின் படுகுழியிலிருந்து வெளியே வரும் விலங்கு அவர்களோடு போர் தொடுத்து, அவர்களை வென்று கொன்றுவிடும். சோதோம் எனவும் எகிப்து எனவும் உருவகமாய் அழைக்கப்படும் அம்மாநகரின் தெருக்களில் அவர்களுடைய பிணங்கள் கிடக்கும். அங்கேதான் அவர்களின் ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டார். பல்வேறு மக்களினத்தார், குலத்தினர், மொழியினர், நாட்டினர் மூன்றரை நாள் அவர்களுடைய பிணங்கள் அங்குக் கிடக்கக் காண்பார்கள்; அவற்றை அடக்கம் செய்ய விடமாட்டார்கள். மண்ணுலகில் வாழ்வோர் அவற்றைக் குறித்து மிகவே மகிழ்ந்து திளைப்பர்; ஒருவருக்கு ஒருவர் அன்பளிப்புகள் வழங்கிக்கொள்வர்; ஏனெனில் இந்த இரண்டு இறைவாக்கினரும் மண்ணுலகில் வாழ்வோர்க்குத் தொல்லை கொடுத்திருந்தனர்.
அந்த மூன்றரை நாளுக்குப் பின் கடவுளிடமிருந்து வந்த உயிர்மூச்சு அவற்றுக்குள் நுழைந்ததும், அவர்கள் எழுந்து நின்றார்கள். அதைப் பார்த்தவர்களைப் பேரச்சம் ஆட்கொண்டது. அப்பொழுது விண்ணகத்திலிருந்து எழுந்த ஓர் உரத்த குரல், “இவ்விடத்திற்கு ஏறி வாருங்கள்” என்று தங்களுக்குச் சொன்னதை அந்த இறைவாக்கினர்கள் இருவரும் கேட்டார்கள். அவர்களுடைய பகைவர்கள் பார்த்துக் கொண்டிருக்க அவர்கள் மேகத்தின்மீது விண்ணகத்துக்குச் சென்றார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 144: 1. 2. 9. 10 . (பல்லவி: 1a)
பல்லவி: என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!
1என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே! போர் புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே! – பல்லவி
2என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! மக்களினத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே! – பல்லவி
9இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்; பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன். – பல்லவி
10அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே! உம் ஊழியர் தாவீதைக் கொடிய வாளினின்று தப்புவித்தவரும் நீரே! – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 திமொ 1: 10b
அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 27-40
அக்காலத்தில்
உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, “போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதிவைத்துள்ளார். இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம், மூன்றாம் சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?” என்று கேட்டனர்.
அதற்கு இயேசு அவர்களிடம், “இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை. இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.
இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, ‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்’ என்று கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே” என்றார்.
மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றனர். அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.