திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு (வி.நினைவு)
திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு
முதல் வாசகம்
நாங்கள் உரோமை போய்ச் சேர்ந்தோம்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 28: 11-16, 30-31
சகோதரர் சகோதரிகளே,
மூன்று மாதங்களுக்குப் பிறகு, குளிர்காலத்தில் மால்தா தீவில் ஒதுங்கியிருந்த ஒரு சிறிய கப்பலில் ஏறினோம். அதில் மிதுனச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அது அலக்சாந்திரியாவைச் சார்ந்தது. நாங்கள் சிரக்கூசாத் துறைமுகத்தை அடைந்து அங்கு மூன்று நாள் தங்கியிருந்தோம். அங்கிருந்து கரையோரமாகச் சுற்றி வந்து இரேகியு என்னும் இடத்தை அடைந்தோம். ஒரு நாள் அங்கு தங்கிய பின் தெற்கிலிருந்து காற்று வீசவே இரண்டாம் நாள் புத்தயோலி என்னும் இடம் சென்றோம். அங்கு நாங்கள் சகோதரர் சகோதரிகளைக் கண்டோம். நாங்கள் அவர்களோடு ஏழு நாள் தங்குமாறு அவர்கள் எங்களைக் கேட்டுக்கொண்டார்கள். அதன்பின் நாங்கள் உரோமை போய்ச் சேர்ந்தோம்.
அங்குள்ள சகோதரர் சகோதரிகள் எங்களைப் பற்றிக் கேள்வியுற்று, ‘அப்பியு சந்தை’, ‘மூன்று விடுதி’ என்னும் இடங்கள் வரை எங்களை எதிர்கொண்டு வந்தார்கள். பவுல் அவர்களைக் கண்டபோது துணிவு கொண்டு கடவுளுக்கு நன்றி செலுத்தினார்.
நாங்கள் உரோமைக்கு வந்தபோது பவுல் தனி வீட்டில் தங்கியிருக்க அனுமதி பெற்றுக்கொண்டார். ஆனால் படைவீரர் ஒருவர் அவரைக் காவல் காத்து வந்தார்.
பவுல் அங்கு இரண்டு ஆண்டுகள் முழுவதும் தாம் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்தார். தம்மிடம் வந்த அனைவரையும் வரவேற்று, இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி முழுத்துணிவோடு தடை ஏதுமின்றிக் கற்பித்துக் கொண்டிருந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 98: 1. 2-3. 4. 5-6 . (பல்லவி: 2b)
பல்லவி: பிற இனத்தார் கண்முன்னே ஆண்டவர் தம் நீதியை வெளிப்படுத்தினார்.
1ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. – பல்லவி
2ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். – பல்லவி
4உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். – பல்லவி
5யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.
6ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி, கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீர் எனப் போற்றுகிறோம்; திருத்தூதர்களின் அருள்அணியும் ஆண்டவரே, உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 22-23
இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த பிறகு, கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக்கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின் மேல் ஏறினார். பொழுது சாய்ந்த பிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்.
அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக் கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது. இரவின் நான்காம் காவல் வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, “ஐயோ, பேய்” என அச்சத்தினால் அலறினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். “துணிவோடு இருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார். பேதுரு அவருக்கு மறுமொழியாக, “ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்” என்றார். அவர், “வா” என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார்.
அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும் போது, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, “நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?” என்றார். அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, “உண்மையாகவே நீர் இறைமகன்” என்றனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.