புனித ஜெர்த்ரூது – கன்னியர் (வி.நினைவு)
ஸ்காட்லாந்து புனித மார்கரீத் (வி.நினைவு)
ஸ்காட்லாந்து புனித மார்கரீத்
முதல் வாசகம்
பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்துகொடுங்கள்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 6-11
ஆண்டவர் கூறுவது:
கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு! பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாது இருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!
அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் ‘இதோ! நான்’ என மறுமொழி தருவார்.
உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக் காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.
ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்; வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்; உன் எலும்புகளை வலிமையாக்குவார்; நீயும் நீர் பாய்ந்த தோட்டம் போலும், ஒருபோதும் வற்றாத நீரூற்று போலும் இருப்பாய்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 112: 1-2. 3-4. 5-7a. 7b-8. 9 . (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.
அல்லது: அல்லேலூயா.
1ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.
2அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசி பெறும். – பல்லவி
3சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.
4இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். – பல்லவி
5மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.
6எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.
7aதீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது. – பல்லவி
7bஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.
8அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி. – பல்லவி
9அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 13: 34
அல்லேலூயா, அல்லேலூயா! ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-17
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என் தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.
நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.
இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.
நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.”
ஆண்டவரின் அருள்வாக்கு.