புனித பெரிய லெயோ – திருத்தந்தை, மறைவல்லுநர்
முதல் வாசகம்
மறைநூல் அறிஞர்கள் அறிவுக்கூர்மையால் நிரப்பப்படுவார்கள்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 39: 6-10
மாண்புமிகு ஆண்டவர் விரும்பினால், மறைநூல் அறிஞர்கள் அறிவுக்கூர்மையால் நிரப்பப்படுவார்கள்; தங்கள் ஞானத்தின் மொழிகளைப் பொழிவார்கள்; தங்கள் வேண்டுதலில் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவார்கள். தங்கள் அறிவுரையையும் அறிவாற்றலையும் நேரிய வழியில் செலுத்துவார்கள்; ஆண்டவருடைய மறைபொருள்களைச் சிந்தித்துப் பார்ப்பார்கள்.
தாங்கள் கற்றறிந்த நற்பயிற்சியை விளக்கிக் காட்டுவார்கள்; ஆண்டவருடைய உடன்படிக்கையின் திருச்சட்டத்தில் பெருமை கொள்வார்கள். பலர் அவர்களுடைய அறிவுக் கூர்மையைப் பாராட்டுவர்; அவர்களது புகழ் ஒருநாளும் நினைவிலிருந்து அகலாது; அவர்களுடைய நினைவு மறையாது; தலைமுறை தலைமுறைக்கும் அவர்களது பெயர் வாழும்.
நாடுகள் அவர்களது ஞானத்தை எடுத்துரைக்கும். மக்கள் சபையும் அவர்களது புகழ்ச்சியை அறிவிக்கும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 37: 3-4. 5-6. 30-31 . (பல்லவி: 30a)
பல்லவி: நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்.
3ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ்.
4ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். – பல்லவி
5உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.
6உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார். – பல்லவி
30நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்; அவர்கள் நா நீதிநெறியை எடுத்துரைக்கும்.
31கடவுளின் திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது; அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை. – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மாற் 1: 17
அல்லேலூயா, அல்லேலூயா! “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19
அக்காலத்தில்,
இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள்.
“ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார்.
அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.