HomeTamil Mass Readingதிருப்பலி வாசகங்கள் - டிசம்பர் 31, 2022 - வ2

திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 31, 2022 – வ2

புனித முதலாம் சில்வெஸ்தர் – திருத்தந்தை

வி.நினைவு
மறைப்பணியாளர் – பொது (திருத்தந்தை)

முதல் வாசகம்

ஓர் ஆயன் சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வது போல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 11-16

ஆண்டவர் கூறுவது:

நானே என் மந்தையைத் தேடிச்சென்று பேணிக் காப்பேன். ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வது போல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன்.

மக்களினங்களினின்று அவற்றை வெளிக் கொணர்ந்து, நாடுகளினின்று கூட்டிச் சேர்த்து, அவற்றின் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவேன். அவற்றை இஸ்ரயேலின் மலைகளிலும் ஓடையோரங்களிலும் நாட்டின் எல்லாக் குடியிருப்புகளிலும் மேய்ப்பேன். நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவற்றை மேய்ப்பேன். இஸ்ரயேலின் மலையுச்சிகளில் அவற்றின் மேய்ச்சல் நிலம் இருக்கும். அங்கே வளமான மேய்ச்சல் நிலத்தில் அவை இளைப்பாறும். இஸ்ரயேலின் மலைகளின் மேல் செழிப்பான மேய்ச்சல் நிலத்தில் அவை மேயும்.

நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக் கொண்டுவருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப்போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 23: 1-3. 4. 5. 6 . (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

1
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2
பசும் புல்வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். – பல்லவி

4
சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். – பல்லவி

5
என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. – பல்லவி

6
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 1: 17

அல்லேலூயா, அல்லேலூயா! “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19

அக்காலத்தில்

இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள்.

“ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார்.

அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர்-2022 ஜன ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24 31
Archive 2022 2023
Pradeep Augustinehttps://www.getcooltricks.com/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

Share your thoughts

guest
Required
The comment form collects your name, email and content to allow us keep track of the comments placed on the website. Please read and accept our website Terms and Privacy Policy to post a comment.
0 Comments
Inline Feedbacks
View all comments