Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 28, 2022

திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 28, 2022

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

திருவருகைக்காலம் முதல் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

நாட்டில் விளையும் நற்கனிகள் இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின் பெருமையும் மேன்மையுமாய் அமையும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 4: 2-6

ஆண்டவர் வரும் நாளில் அவரால் துளிர்க்கும் தளிர், அழகும் மேன்மையும் வாய்ந்ததாய் இருக்கும்; நாட்டில் விளையும் நற்கனிவகைகள், இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின் பெருமையும் மேன்மையுமாய் அமையும். அந்நாளில் சீயோனில் எஞ்சியிருப்போரும், எருசலேமில் தப்பி வாழ்வோரும் ‛புனிதர்’ எனப் பெயர் பெறுவர்; உயிர் பிழைப்பதற்கென்று எருசலேமில் பெயர் எழுதப்பட்டோரும் ‛புனிதர்’ எனப்படுவர்.

என் தலைவர் சீயோன் மகளின் தீட்டைக் கழுவித் தூய்மைப்படுத்துவார்; நீதியின்படி தீர்ப்பிடும் அவரது தன்மையாலும் நெருப்புத்தணலையொத்த அவரது ஆற்றலாலும் எருசலேமின் இரத்தக் கறைகளைக் கழுவி அதனைத் தூய்மைப்படுத்துவார். சீயோன் மலையின் முழுப்பரப்பின் மேலும், அங்கே கூடிவரும் சபைக் கூட்டங்கள் மேலும், மேகத்தை ஆண்டவர் பகலில் தோற்றுவிப்பார்; புகைப்படலத்தையும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஒளிச் சுடரையும் இரவில் ஏற்படுத்துவார்; ஏனெனில், அனைத்து மாட்சிக்கு மேல் ஒரு விதான மண்டபம் இருக்கும். அது பகல் வெப்பத்தினின்று காக்கும் நிழலாகவும், புயல்காற்றுக்கும் மழைக்கும் ஒதுங்கும் புகலிடமாகவும் அரணாகவும் அமையும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 122: 1-2. 4-5. 6-7. 8-9 . (பல்லவி: 1)

பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

1‘ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்’ என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.

2எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். – பல்லவி

4ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.

5அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். – பல்லவி

6எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; “உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக!

7உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!” – பல்லவி

8“உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.

9நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 80: 3

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும். எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-11

அக்காலத்தில்

இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். “ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார்.

இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.” என்றார்

ஆண்டவரின் அருள்வாக்கு.

The readings on this page are taken from the Douay-Rheims Catholic Bible. You can also read the Mass Readings taken from the New Jerusalem Bible, which is used at Mass in most of the English-speaking world. (References, Copyrights).
நவம்பர்-2022 டிச ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2022 2023
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest in Prayers

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more