புனித மார்ட்டின் தெ போரஸ் – துறவி
முதல் வாசகம்
தூய்மையானவை எவையோ அவற்றையே மனத்தில் இருத்துங்கள்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-9
சகோதரர் சகோதரிகளே,
ஆண்டவரோடு இணைந்து என்று மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள். கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார்.
எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.
இறுதியாக, சகோதர சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள்.
நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவை, என் வழியாய்ப் பெற்றுக்கொண்டவை, என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடியுங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடிருப்பார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 131: 1. 2. 3
பல்லவி: உம்மோடு நான் அமைதியாய் இருக்க, ஆண்டவரே என் உயிரைக் காத்தருளும்.
1ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை! என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. – பல்லவி
2மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என்நெஞ்சம் என்னகத்தே அமைதியாய் உள்ளது. – பல்லவி
3இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு! – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 13: 34
அல்லேலூயா, அல்லேலூயா! ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40
அக்காலத்தில்
இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார்.
அவர், “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன” என்று பதிலளித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.