பொதுக்காலம் 28ஆம் வாரம் – வியாழன்
முதல் வாசகம்
உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-10
இயேசு கிறிஸ்துவோடு இணைந்து நம்பிக்கை கொண்டு வாழும் எபேசு நகர இறைமக்களுக்கு, கடவுளின் திருவுளத்தால் திருத்தூதனாயிருக்கும் பவுல் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார்.
இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். அந்த அருளை அவர் நம்மில் பெருகச் செய்து, அனைத்து ஞானத்தையும் அறிவுத் திறனையும் தந்துள்ளார். அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம். கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்கவேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 98: 1. 2-3a. 3b-4. 5-6 . (பல்லவி: 2a)
பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்.
1ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. – பல்லவி
2ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3aஇஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். – பல்லவி
3bஉலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். – பல்லவி
5யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.
6ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 14: 6
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
ஆபேலின் இரத்தம் முதல் சக்கரியாவின் இரத்தம் வரை, இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காகக் கணக்குக் கேட்கப்படும்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 47-54
அக்காலத்தில்
இயேசு கூறியது: “ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறீர்கள். ஆனால் அவர்களைக் கொலை செய்தவர்கள் உங்கள் மூதாதையர்களே. உங்கள் மூதாதையரின் செயல்களுக்கு நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்; அவற்றுக்கு உடன்பட்டும் இருக்கிறீர்கள். அவர்கள் கொலை செய்தார்கள்; நீங்கள் நினைவுச் சின்னம் எழுப்புகிறீர்கள்.
இதை முன்னிட்டே கடவுளின் ஞானம் இவ்வாறு கூறுகிறது: நான் அவர்களிடம் இறைவாக்கினரையும் திருத்தூதரையும் அனுப்புவேன். அவர்களுள் சிலரைக் கொலை செய்வார்கள்; சிலரைத் துன்புறுத்துவார்கள். ஆபேலின் இரத்தம் முதல், பலிபீடத்திற்கும் தூயகத்திற்கும் நடுவே சிந்தப்பட்ட சக்கரியாவின் இரத்தம் வரை, உலகம் தோன்றியதிலிருந்து சிந்தப்பட்ட இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காக இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும்.
ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு! ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்.” இயேசு அங்கிருந்து புறப்பட்டபோது மறைநூல் அறிஞரும் பரிசேயரும் பகைமை உணர்வு மிகுந்தவராய் அவரது பேச்சில் அவரைச் சிக்கவைக்குமாறு பல கேள்விகளைக் கேட்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.