பொதுக்காலம் 30ஆம் வாரம் – ஞாயிறு
முதல் வாசகம்
தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 35: 12-14, 16-18
ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்; அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையாது. அவர் ஏழைகளுக்கு எதிராய் எவரையும் ஒருதலைச் சார்பாய் ஏற்கமாட்டார்; தீங்கிழைக்கப்பட்டோரின் மன்றாட்டைக் கேட்பார். கைவிடப்பட்டோரின் வேண்டுதலைப் புறக்கணியார். தம்மிடம் முறையிடும் கைம்பெண்களைக் கைவிடார்.
ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பணிசெய்வோர் ஏற்றுக் கொள்ளப்படுவர். அவர்களுடைய மன்றாட்டு முகில்களை எட்டும். தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்; அது ஆண்டவரை அடையும்வரை அவர்கள் ஆறுதல் அடைவதில்லை. உன்னத இறைவன் சந்திக்க வரும்வரை அவர்கள் நற்பயிற்சியில் தளர்ச்சியடைவதில்லை; அவர் நீதிமான்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறார்; தம் தீர்ப்பைச் செயல்படுத்துகிறார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 34: 1-2. 16-17. 18,22 . (பல்லவி: 6a)
பல்லவி: இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.
1ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். – பல்லவி
16ஆண்டவரின் முகமோ தீமை செய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார்.
17நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். – பல்லவி
18உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.
22ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். – பல்லவி
இரண்டாம் வாசகம்
எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-8, 16-18
அன்பிற்குரியவரே,
நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்.
நான் முதன்முறை வழக்காடியபோது எவரும் என் பக்கம் இருக்கவில்லை; எல்லாரும் என்னை விட்டு அகன்றனர். அக்குற்றம் அவர்களைச் சாராதிருப்பதாக. நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்க வேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார்.
தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 கொரி 5: 19
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
பரிசேயர் அல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-14
அக்காலத்தில்
தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.
பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பு இருக் கிறேன்; என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.’ ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார். “
இயேசு, “பரிசேயர் அல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.