பொதுக்காலம் 28ஆம் வாரம் – சனி
முதல் வாசகம்
கிறிஸ்துவைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-23
சகோதரர் சகோதரிகளே,
ஆண்டவராகிய இயேசுவின் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை பற்றியும் இறைமக்கள் அனைவரிடமும் நீங்கள் செலுத்தும் அன்பு பற்றியும் கேள்வியுற்று, நான் இறைவனிடம் வேண்டும்போது உங்களை நினைவு கூர்ந்து உங்களுக்காக நன்றி செலுத்தத் தவறுவதில்லை.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர், அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு, ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்பவர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு, உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! கடவுள் வலிமைமிக்க தம் ஆற்றலை, கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்த்தினார். அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்; இவ்வுலகில் மட்டும் அல்ல; வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்.
அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச் செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 8: 1-2a. 3-4. 5-6 . (பல்லவி: 6a)
பல்லவி: உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்.
1ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது.
2aபாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் வலிமையை உறுதிப்படுத்தினீர். – பல்லவி
3உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது,
4மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? – பல்லவி
5ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.
6உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 15: 26b, 27a
அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார்.
மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார்.
தொழுகைக்கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதில் அளிப்பது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.