Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 31, 2022

திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 31, 2022

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

பொதுக்காலம் 31ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-4

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 131: 1. 2. 3

பல்லவி: என் நெஞ்சம் அமைதிபெற உம் திருமுன் வைத்துக் காத்தருளும்.

1ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை! என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. – பல்லவி

2மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது. – பல்லவி

3இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 31b-32

அல்லேலூயா, அல்லேலூயா! என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நண்பர்களையல்ல, ஏழைகளையும் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-14

அக்காலத்தில்

தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, “நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

The readings on this page are taken from the Douay-Rheims Catholic Bible. You can also read the Mass Readings taken from the New Jerusalem Bible, which is used at Mass in most of the English-speaking world. (References, Copyrights).
அக்டோபர்-2022 நவ ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
ச 1 8 15 22 29
Archive 2022 2023
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest in Prayers

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.