Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 24, 2022

திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 24, 2022

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

பொதுக்காலம் 30ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

கிறிஸ்து அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 32- 5: 8

சகோதரர் சகோதரிகளே,

ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்தது போல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.

ஆகவே நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள். கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்பு கூர்ந்ததுபோல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.

பரத்தைமை, அனைத்து ஒழுக்கக் கேடுகள், பேராசை ஆகியவற்றின் பெயர்கூட உங்களிடையே சொல்லப்படலாகாது. இதுவே இறைமக்களுக்கு ஏற்ற நடத்தை. அவ்வாறே, வெட்கங்கெட்ட செயல், மடத்தனமான பேச்சு, பகடி பண்ணுதல் ஆகியவை தகாதவை; நன்றி சொல்லுதலே தகும்.

ஏனெனில் பரத்தைமையில் ஈடுபடுவோர், ஒழுக்கக் கேடாக நடப்போர், சிலை வழிபாடாகிய பேராசை கொண்டோர் போன்ற எவரும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமைப்பேறு அடையார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். வீண் வார்த்தைகளால் உங்களை யாரும் ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில் மேற்கூறிய செயல்களால்தான் கீழ்ப்படியாத மக்கள்மீது கடவுளின் சினம் வருகின்றது. எனவே அவர்களோடு நீங்கள் எதிலும் பங்குகொள்ள வேண்டாம்.

ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 1: 1-2. 3. 4,6 . (பல்லவி: எபே 5: 1)

பல்லவி: நீங்கள் கடவுளின் பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள்.

1நற்பேறு பெற்றவர் யார்? – அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;

2ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். – பல்லவி

3அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். – பல்லவி

4ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்.

6நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 17: 17b, a

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஆபிரகாமின் மகளாகிய இவரை இந்தக் கட்டிலிருந்து ஓய்வு நாளில் விடுவிப்பது முறையில்லையா?

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 10-17

அக்காலத்தில்

ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக் கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல் நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார்.

இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, “அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்” என்று கூறி, தம் கைகளை அவர்மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

இயேசு ஓய்வு நாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர் கோபம்கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, “வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே; அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக் கொள்ளுங்கள்; ஓய்வு நாளில் வேண்டாம்” என்றார்.

ஆண்டவரோ அவரைப் பார்த்து, “வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வு நாளில் தம் மாட்டையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டு போய்த் தண்ணீர் காட்டுவது இல்லையோ? பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வு நாளில் விடுவிப்பது முறையில்லையா?” என்று கேட்டார்.

அவர் இவற்றைச் சொன்னபோது, அவரை எதிர்த்த அனைவரும் வெட்கப்பட்டனர். திரண்டிருந்த மக்கள் எல்லாரும் அவர் செய்த மாட்சிக்குரிய செயல்கள் அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

The readings on this page are taken from the Douay-Rheims Catholic Bible. You can also read the Mass Readings taken from the New Jerusalem Bible, which is used at Mass in most of the English-speaking world. (References, Copyrights).
அக்டோபர்-2022 நவ ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
ச 1 8 15 22 29
Archive 2022 2023
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest in Prayers

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.