பொதுக்காலம் 26ஆம் வாரம் – சனி
முதல் வாசகம்
என் கண்களே உம்மைக் காண்கின்றன. ஆகையால் என்னையே நொந்து கொள்ளுகின்றேன்.
யோபு நூலிலிருந்து வாசகம் 42: 1-3, 5-6, 12-17
யோபு ஆண்டவர்க்குக் கூறிய பதில்: நீர் அனைத்தையும் ஆற்ற வல்லவர்; அறிவேன் அதனை; நீர் நினைத்த எதையும் தடுக்க இயலாது. ‘அறிவில்லாமல் ஆலோசனையை மறைப்பவன் எவன்?’ என்று கேட்டீர்; உண்மையில் நான்தான் புரியாதவற்றைப் புகன்றேன்; அவை எனக்கு விளங்கா அளவுக்கு விந்தையானவை. உம்மைப் பற்றிக் காதால் மட்டுமே கேள்விப்பட்டேன். ஆனால் இப்பொழுது, என் கண்களே உம்மைக் காண்கின்றன. ஆகையால் என்னையே நொந்து கொள்ளுகின்றேன்; புழுதியிலும் சாம்பலிலும் இருந்து மனம் வருந்துகின்றேன்.
யோபின் முன்னைய நாள்களில் இருந்ததைவிட, பின்னைய நாள்களில் ஆண்டவர் அதிகமாக ஆசி வழங்கினார். இப்பொழுது பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் பெட்டைக் கழுதைகளும் அவருக்கு இருந்தன. அவருக்கு ஏழு புதல்வர்களும் மூன்று புதல்வியரும் பிறந்தனர். மூத்த மகளுக்கு எமிமா என்றும் இரண்டாவது மகளுக்குக் கெட்டிசியா என்றும், மூன்றாவது மகளுக்குக் கெரேன் அப்பூக்கு என்றும் பெயரிட்டார். யோபின் புதல்வியரைப் போல் அழகுவாய்ந்த நங்கையர் நாடெங்கும் இருந்ததில்லை. அவர்களின் தந்தை, அவர்களின் சகோதரர்களோடு அவர்களுக்கும் சொத்தில் உரிமை கொடுத்தார்.
அதன்பின் யோபு நூற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தார்; தம் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் நான்காம் தலைமுறை வரை கண்டுகளித்தார். இவ்வாறு யோபு முதுமை அடைந்து, பல்லாண்டு வாழ்ந்து இறந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 119: 66,71. 75,91. 125,130 . (பல்லவி: 135a)
பல்லவி: உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச்செய்யும்!
66நன்மதியையும் அறிவாற்றலையும் எனக்குப் புகட்டும்; ஏனெனில், உம் கட்டளைகள் மீது நம்பிக்கை வைக்கின்றேன்.
71எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே; அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன். – பல்லவி
75ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகள் நேரியவை என அறிவேன்; நீர் என்னைச் சிறுமைப்படுத்தியது சரியே.
91உம் ஒழுங்குமுறைகளின்படியே அனைத்தும் இன்றுவரை நிலைத்துள்ளன; ஏனெனில், அவை உமக்கு ஊழியம் செய்கின்றன. – பல்லவி
125உம் ஊழியன் நான், எனக்கு நுண்ணறிவு புகட்டும்; அப்போது உம் ஒழுங்குமுறைகளை அறிந்து கொள்வேன்.
130உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 25
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-24
அக்காலத்தில்
அனுப்பப்பட்ட எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பி வந்து, “ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன” என்றனர். அதற்கு அவர், “வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப் பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்” என்றார்.
அந்நேரத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகை அடைந்து, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்” என்றார். “என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.
பின்பு அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக, “நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர். ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள்; ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.