பொதுக்காலம் 30ஆம் வாரம் – வியாழன்
முதல் வாசகம்
அனைத்தின் மீதும் வெற்றிபெற்று நிலைநிற்க வல்லமை பெறும்படி, கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 10-20
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் ஆண்டவரோடு இணைந்து, அவர் தரும் வலிமையாலும் ஆற்றலாலும் வலுவூட்டப் பெறுங்கள். அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்துகொள்ளுங்கள். ஏனென்றால் நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சிபுரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர், வான் வெளியிலுள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோடும் போராடுகிறோம்.
எனவே பொல்லாத நாள் வரும்போது, எதிர்த்து நின்று, அனைத்தின் மீதும் வெற்றிபெற்று நிலைநிற்க வல்லமை பெறும்படி, கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆகையால், உண்மையை இடைக்கச்சையாகக் கட்டிக்கொண்டு, நீதியை மார்புக் கவசமாக அணிந்து நில்லுங்கள்; அமைதியை அருளும் நற்செய்தியை அறிவிப்பதற்கான ஆயத்த நிலையை உங்கள் காலில் மிதியடிகளாகப் போட்டுக் கொள்ளுங்கள். எந்நிலையிலும் நம்பிக்கை என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள். அதைக் கொண்டு தீயோனின் தீக்கணைகளையெல்லாம் அணைத்துவிட முடியும்.
மீட்பைத் தலைச் சீராவாகவும், கடவுளின் வார்த்தையைத் தூய ஆவி அருளும் போர் வாளாகவும் எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள்; எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் செய்யுங்கள். இதில் உறுதியாய் நிலைத்திருந்து, விழிப்பாய் இருங்கள்; இறைமக்கள் அனைவருக்காவும் மன்றாடுங்கள். நான் பேசும்போது நற்செய்தியின் மறைபொருளைத் துணிவுடன் தெரியப்படுத்துவதற்கான வார்த்தைகளைக் கடவுள் எனக்குத் தந்தருளுமாறு எனக்காகவும் மன்றாடுங்கள். நான் விலங்கிடப்பட்டிருந்தும் இந்த நற்செய்தியின் தூதுவனாக இருக்கிறேன். நான் பேச வேண்டிய முறையில் அதைத் துணிவுடன் எடுத்துக் கூற எனக்காக மன்றாடுங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 144: 1-2. 9-10 . (பல்லவி: 1a)
பல்லவி: என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!
1என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே! போர்புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே.
2என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! மக்களினத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே. – பல்லவி
9இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்; பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன்.
10அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே! உம் ஊழியர் தாவீதைக் கொடிய வாளினின்று தப்புவித்தவரும் நீரே. – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 19: 38; 2: 14
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக! உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே!
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35
அக்காலத்தில்
பரிசேயர் சிலர் இயேசுவிடம் வந்து, “இங்கிருந்து போய்விடும்; ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்ல வேண்டும் என்றிருக்கிறான்” என்று கூறினர். அதற்கு அவர் கூறியது: “இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன்; மூன்றாம் நாளில் என் பணி நிறைவுபெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள். இன்றும் நாளையும் அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாக வேண்டும். ஏனெனில், இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே!
எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே! உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே! கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பது போல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன்; உனக்கு விருப்பமில்லையே!
இதோ, உங்கள் இறை இல்லம் கைவிடப்படும். ‘ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்’ என நீங்கள் கூறும் நாள் வரும்வரை என்னைக் காணமாட்டீர்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.