இயேசுவின் (அவிலா நகர்) புனித தெரேசா – கன்னியர், மறைவல்லுநர்
முதல் வாசகம்
தூய ஆவியார்தாமே நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 22-27
சகோதரர் சகோதரிகளே,
இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம். படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும், எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கெனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர்நோக்குவாரா? நாமோ காணாத ஒன்றை எதிர்நோக்கி இருக்கும்போது அதற்காகத் தளரா மனத்தோடு காத்திருக்கிறோம்.
இவ்வாறு தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணை நிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார். உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்து பேசுகிறார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 19: 8. 9. 10. 11 . (பல்லவி: யோவா 6: 63a)
பல்லவி: ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.
8ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. – பல்லவி
9ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. – பல்லவி
10அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலை மிக்கவை; தேனினும், தேனடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை. – பல்லவி
11அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன். அவற்றைக் கடைப்பிடிப்போருக்கு மிகுந்த பரிசு உண்டு. – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 15: 9b, 5b
அல்லேலூயா, அல்லேலூயா! என் அன்பில் நிலைத்திருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-8
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “உண்மையான திராட்சைக் கொடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார். நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்.
நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளை திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது.
நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கிளையைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.
நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.
நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.