பொதுக்காலம் 12ஆம் வாரம் – சனி
முதல் வாசகம்
சீயோன் மகளே! ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடுக!
புலம்பல் நூலிலிருந்து வாசகம் 2: 2, 10-14, 18-19
ஆண்டவர் யாக்கோபின் அனைத்துக் குடியிருப்புகளையும் இரக்கமின்றி அழித்தார்; அவர் சீற்றமடைந்து மகள் யூதாவின் அரண்களைத் தகர்த்தார்; அவற்றைத் தரைமட்டமாக்கினார். அவரது நாட்டையும் அதன் தலைவர்களையும் மேன்மை குலையச் செய்தார்.
மகள் சீயோனின் பெரியோர் தரையில் மௌனமாய் அமர்ந்துள்ளனர்; அவர்கள் தங்கள் தலைமேல் புழுதியைத் தூவிக் கொண்டுள்ளனர்; சாக்கு உடை உடுத்தியுள்ளனர்; எருசலேமின் கன்னிப் பெண்கள் தங்கள் தலைகளைத் தரை மட்டும் தாழ்த்தியுள்ளனர்.
என் கண்கள் கண்ணீர் சொரிந்து சோர்ந்துள்ளன! என் குலை நடுங்குகின்றது! என் துயரத்தால் என் ஈரல் வெடித்துத் தரையில் சிதறுகின்றது!
என் மக்களாகிய மகள் நசுக்கப்பட்டுள்ளாள்! நகர் வீதிகளில் குழந்தைகளும் மழலைகளும் மயங்கிக் கிடக்கின்றனர்! அவர்கள் தங்கள் அன்னையரிடம், ‘அப்பம், திராட்சை இரசம் எங்கே?’ என்று கேட்கின்றனர்! படுகாயமுற்றோரைப் போல, நகர் வீதிகளில் அவர்கள் மயங்கி வீழ்கின்றனர்! தாய் மடியில் உயிர் விட்டவர் போல் ஆகின்றனர்!
மகளே! எருசலேம்! உன் சார்பாக நான் என்ன சொல்வேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? மகள் சீயோனே! கன்னிப் பெண்ணே! யாருக்கு உன்னை இணையாக்கித் தேற்றுவேன் உன்னை? உன் காயம் கடலைப் போல் விரிந்துள்ளதே! உன்னைக் குணமாக்க யாரால் முடியும்?
உன் இறைவாக்கினர் உனக்காகப் பொய்யும் புரட்டுமான காட்சிகளைக் கண்டனர்; நீ நாடுகடத்தப்பட இருப்பதைத் தவிர்க்குமாறு, உன் நெறிகேடுகளை அவர்கள் உனக்கு எடுத்துச் சொல்லவில்லை; அவர்கள் பொய்யையும் அபத்தங்களையும் காட்சியாகக் கண்டு, உனக்குப் பொய்வாக்கு உரைத்தனர்!
அவர்களின் இதயம் என் தலைவனை நோக்கிக் கூக்குரலிடுகின்றது; மகள் சீயோனின் மதிலே! இரவும் பகலும் வெள்ளமெனக் கண்ணீர் பொழி! உனக்கு ஓய்வு வேண்டாம்! கண்ணீர் விடாமல் நீ இருக்க வேண்டாம்!
எழு! இரவில் முதற் சாமத்தில் குரலெழுப்பு! உள்ளத்தில் உள்ளதை என் தலைவர் திருமுன் தண்ணீரைப் போல் ஊற்றிவிடு! தெரு முனையில் பசியால் மயங்கி விழும் குழந்தைகளின் உயிருக்காக, அவரை நோக்கி உன் கைகளை உயர்த்து!
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 74: 1-2. 3-4. 5-7. 20-21 . (பல்லவி: 19b)
பல்லவி: சிறுமைப்படும் உம் மக்களின் உயிரை மறந்துவிடாதீர் ஆண்டவரே!
1கடவுளே! நீர் ஏன் எங்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டீர்? உமது மேய்ச்சல் நில ஆடுகள்மேல் உமது சினம் ஏன் புகைந்தெழுகின்றது?
2பண்டைக் காலத்திலேயே நீர் உமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட சபைக்கூட்டத்தை நினைத்தருளும்; நீர் மீட்டு உமக்கு உரிமையாக்கிக் கொண்ட இனத்தாரை மறந்துவிடாதேயும்; நீர் கோவில் கொண்டிருந்த சீயோன் மலையையும் நினைவுகூர்ந்தருளும். – பல்லவி
3நெடுநாள்களாகப் பாழடைந்து கிடக்கும் பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவீராக! எதிரிகள் உமது தூயகத்தில் அனைத்தையும் பாழ்படுத்தி விட்டார்கள்.
4உம்முடைய எதிரிகள் உம் திருத்தலத்தில் வெற்றி முழக்கம் செய்கின்றார்கள்; தங்கள் கொடிகளை வெற்றிக்கு அடையாளமாக நாட்டுகின்றார்கள். – பல்லவி
5அவர்கள் மேற்கு வாயிலில் அமைக்கப்பட்ட மரப் பின்னல் வேலைப்பாடுகளைக் கோடரிகளால் சிதைத்தார்கள்.
6மேலும் அங்கிருந்த மர வேலைப்பாடுகள் அனைத்தையும் சிற்றுளியும் சுத்தியலும் கொண்டு தகர்த்தெறிந்தார்கள்;
7அவர்கள் உமது தூயகத்திற்கு தீ வைத்தார்கள்; அவர்கள் உமது பெயருக்குரிய உறைவிடத்தைத் தீட்டுப்படுத்தினார்கள். – பல்லவி
20உமது உடன்படிக்கையை நினைத்தருளும்! நாட்டின் இருளான இடங்களில் கொடுமை நடக்கும் குடியிருப்புகள் நிறைந்திருக்கின்றன.
21சிறுமையுற்றோர் மீண்டும் வெட்கமுறாதபடி செய்யும்; எளியோரும் வறியோரும் உமது பெயரைப் புகழ்வராக! – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 2: 19 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவனின் வார்த்தையைத் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து வந்த மரியா பேறுபெற்றவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 41-51
ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” என்றார். அவர் அவர்களிடம் “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.