பதுவா நகர் புனித அந்தோனியார் – மறைப்பணியாளர், மறைவல்லுநர் (நினைவு)
பொதுக்காலம் 11ஆம் வாரம் – திங்கள்
முதல் வாசகம்
நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்தான்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 21: 1-16
அந்நாள்களில்
இஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு இஸ்ரயேலில், சமாரிய அரசன் ஆகாபின் அரண்மனை அருகில், ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. ஆகாபு நாபோத்திடம், “உன் திராட்சைத் தோட்டம் என் அரண்மனை அருகில் இருப்பதால், நான் அதைக் காய்கறித் தோட்டம் ஆக்கும்படி என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாய் அதைவிட நல்ல திராட்சைத் தோட்டத்தை உனக்குத் தருவேன். உனக்கு விருப்பமானால், அதன் விலையை வெள்ளியாகத் தருகிறேன்” என்றான்.
அதற்கு நாபோத்து ஆகாபிடம், “என் மூதாதையரின் உரிமைச் சொத்தை நான் உமக்குக் கொடாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக!” என்றான். “என் மூதாதையரின் உரிமைச் சொத்தை உமக்குக் கொடுக்க மாட்டேன்” என்று இஸ்ரியேலனாகிய நாபோத்து தன்னிடம் சொன்ன வார்த்தைகளை முன்னிட்டு, ஆகாபு ஆத்திரத்துடனும் கோபத்துடனும் தன் அரண்மனைக்கு வந்தான்; முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் கட்டிலில் படுத்துக்கிடந்தான்; உணவருந்த மறுத்துவிட்டான்.
அப்போது அவனுடைய மனைவி ஈசபேல் அவனிடம் வந்து, “நீர் ஏன் மனம் சோர்ந்திருக்கிறீர்? ஏன் உணவருந்தவில்லை?” என்று அவனைக் கேட்டாள். அதற்கு அவன் அவளிடம், “நான் இஸ்ரியேலனாகிய நாபோத்திடம் பேசினேன். ‘உன் திராட்சைத் தோட்டத்தை அதற்கான வெள்ளிக்கு எனக்குக் கொடுத்துவிடு. உனக்கு விருப்பமானால், அதற்குப் பதிலாக வேறு திராட்சைத் தோட்டத்தைத் தருவேன்’ என்றேன். அதற்கு அவன் ‘என் திராட்சைத் தோட்டத்தை உமக்குத் தர மாட்டேன்’ என்று சொல்லிவிட்டான்” என்றான். அப்போது அவன் மனைவி ஈசபேல் அவனை நோக்கி, “இஸ்ரயேலின் அரசராகிய நீர் இப்படியா நடந்துகொள்வது? எழுந்திருந்து உணவருந்தி மனமகிழ்வாய் இரும். இஸ்ரியேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை நானே உம்மிடம் ஒப்படைக்கிறேன்” என்றாள்.
எனவே அவள் ஆகாபின் பெயரால் மடல்கள் எழுதி, அவற்றில் அவனது முத்திரையைப் பொறித்து, அம்மடல்களை நாபோத்துடன் நகரில் குடியிருந்த பெரியோருக்கும் உயர்குடி மக்களுக்கும் அனுப்பினாள். அம்மடல்களில் அவள், “நீங்கள் ஒரு நோன்பு அறிவித்து நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமரச் செய்யுங்கள். அவனுக்கு எதிராய் இழி மனிதர் இருவரை ஏவிவிட்டு, ‘நீ கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தாய்’ என்று அவன் மீது குற்றம் சாட்டச் செய்யுங்கள். பின்னர் அவனை வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றுபோடுங்கள்” என்று எழுதியிருந்தாள்.
நாபோத்துடன் அந்நகரில் குடியிருந்த பெரியோரும் உயர்குடி மக்களும் ஈசபேல் தமக்கு அனுப்பிய மடல்களில் எழுதி இருந்தவாறே செய்தனர். அவர்கள் ஒரு நோன்பு அறிவித்து, நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமர்த்தினர். அப்பொழுது அந்த இழி மனிதர் இருவரும் வந்து நாபோத்துக்கு எதிரே உட்கார்ந்தனர். அந்த இழி மனிதர் மக்களைப் பார்த்து, “நாபோத்து கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தான்” என்று அவன் மீது குற்றம் சாட்டினர். எனவே, அவர்கள் அவனை நகருக்கு வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றனர்.
பிறகு அவர்கள், “நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்தான்” என்று ஈசபேலுக்குச் செய்தி அனுப்பினர். நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்ததை ஈசபேல் கேட்டவுடன் அவள் ஆகாபை நோக்கி, “நீர் எழுந்து சென்று இஸ்ரியேலனாகிய நாபோத்து உமக்கு விற்க மறுத்த அதே திராட்சைத் தோட்டத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும்; நாபோத்து உயிரோடில்லை; அவன் இறந்து போனான்” என்றாள். நாபோத்து இறந்து போனதை ஆகாபு கேட்டு, இஸ்ரியேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை உடைமையாக்கிக் கொள்ளப் புறப்பட்டுப் போனான்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 5: 1-2a. 4-5a. 5b-6 . (பல்லவி: 1b)
பல்லவி: ஆண்டவரே, என் பெருமூச்சைக் கவனித்தருளும்.
1ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்; என் பெருமூச்சைக் கவனித்தருளும்.
2aஎன் அரசரே, என் கடவுளே, என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும். – பல்லவி
4ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை; உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.
5aஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்கமாட்டார். – பல்லவி
5bதீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர்.
6பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்; கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திபா 119: 105
அல்லேலூயா, அல்லேலூயா! என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 38-42
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “ ‘கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.