பொதுக்காலம் 13ஆம் வாரம் – வியாழன்
முதல் வாசகம்
என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு.
இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 7: 10-17
அந்நாள்களில்
பெத்தேலின் குருவாகிய அமட்சியா என்பவன் இஸ்ரயேலின் அரசன் எரொபவாமுக்கு இவ்வாறு சொல்லி அனுப்பினான்: “இஸ்ரயேல் வீட்டாரிடையே ஆமோஸ் உமக்கு எதிராகச் சதி செய்கிறான். அவன் சொல்வதை எல்லாம் இந்த நாட்டால் தாங்கமுடியவில்லை. ஏனெனில், ‘எரொபவாம் வாளால் மடிவான்; அவனது நாட்டைவிட்டு இஸ்ரயேல் அடிமையாய்க் கொண்டு போகப்படும்’ என்று ஆமோஸ் சொல்லுகிறான்.”
பின்பு அமட்சியா ஆமோசைப் பார்த்து, “காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு; யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு; அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள். பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே; ஏனெனில், இது அரசின் புனித இடம். அரசுக்குரிய இல்லம்” என்று சொன்னான்.
ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: “நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை; நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன். ஆடுகள் ஓட்டிக்கொண்டுபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, ‘என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு’ என்று அனுப்பினார்.
எனவே, இப்பொழுது ஆண்டவரின் வாக்கைக் கேள்: ‘இஸ்ரயேலுக்கு எதிராக இறைவாக்கு உரைக்காதே; ஈசாக்கின் வீட்டார்க்கு எதிராகப் பேசாதே’ என்று நீ சொல்கிறாய்! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “உன் மனைவி நகரில் விலைமகளாய் இருப்பாள்; உன் புதல்வர் புதல்வியர் வாளால் மடிவர்; உன் நிலபுலம் பங்குபோட்டுக் கொள்ளப்படும், நீயோ புனிதமற்ற நாட்டிலே மாண்டு போவாய்; இஸ்ரயேல் தன் நாட்டுக்கு வெளியே அடிமையாகக் கொண்டு போகப்படும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 19: 7. 8. 9. 10 . (பல்லவி: 9b)
பல்லவி: ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையும் நீதியுமானவை.
7ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. – பல்லவி
8ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. – பல்லவி
9ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. – பல்லவி
10அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை. – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 கொரி 5: 19
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அவரே அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மக்கள் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-8
அக்காலத்தில்
இயேசு படகேறி மறு கரைக்குச் சென்று தம் சொந்த நகரை அடைந்தார். அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, துணிவோடிரு, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
அப்பொழுது மறைநூல் அறிஞர்கள் சிலர், “இவன் கடவுளைப் பழிக்கிறான்” என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர். அவர்களுடைய சிந்தனைகளை இயேசு அறிந்து அவர்களை நோக்கி, “உங்கள் உள்ளங்களில் நீங்கள் தீயன சிந்திப்பதேன்? ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்பதா, ‘எழுந்து நட’ என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ” என்றார். அவரும் எழுந்து தமது வீட்டுக்குப் போனார்.
இதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் அச்சமுற்றனர். இத்தகைய அதிகாரத்தை மனிதருக்கு அளித்த கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.