back to top
Home Blog Page 249

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 17, 2022

பொதுக்காலம் 20ஆம் வாரம் – புதன்

முதல் வாசகம்

அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன். அவை இனி அவர்களுக்கு உணவாகா.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 1-11

அந்நாள்களில்

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. மானிடா! இஸ்ரயேலின் ஆயர்களுக்கு எதிராக இறைவாக்கு உரை. அவர்களுக்கு இறைவாக்கு உரைத்துச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: தாங்களே மேய்ந்துகொள்ளும் இஸ்ரயேலின் ஆயர்களுக்கு ஐயோ கேடு! ஆயர்கள் மந்தையையன்றோ மேய்க்க வேண்டும்! நீங்கள் கொழுப்பானதை உண்டு, ஆட்டு மயிராடையை உடுத்தி, மந்தையில் சிறந்ததை அடிக்கிறீர்கள். மந்தையையோ மேய்ப்பதில்லை. நீங்கள் நலிந்தவற்றைத் திடப்படுத்தவில்லை; பிணியுற்றவற்றிற்குக் குணமளிக்கவில்லை. காயமுற்றவற்றிற்குக் கட்டுப்போடவில்லை; வழி தப்பியவற்றைத் திரும்பக் கூட்டி வரவில்லை. காணாமல் போனவற்றைத் தேடவில்லை. ஆனால், அவற்றைக் கொடுமையுடனும் வன்முறையுடனும் நடத்தினீர்கள். ஆயன் இல்லாமையால் அவை அலைந்து திரிந்தன. அப்போது எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் அவை இரையாயின. என் ஆடுகள் எல்லா மலைகளிலும் உயர்ந்த குன்றுகளிலும் அலைந்து திரிந்தன. பூவுலகில் எவ்விடத்திலும் என் மந்தை சிதறுண்டு போனது; அதைத் தேடவோ கூட்டிச் சேர்க்கவோ எவரும் இலர்.

எனவே ஆயர்களே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மேல் ஆணை! என் மந்தை கொள்ளையிடப்பட்டது; எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் இரையானது. ஏனெனில் அதற்கு ஆயன் இல்லை. என் ஆயர்கள் என் மந்தையைத் தேடவில்லை. என் மந்தையை அவர்கள் மேய்க்காமல் தாங்களே மேய்ந்துகொள்கிறார்கள்.

எனவே, ஆயர்களே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் ஆயர்களுக்கு எதிராக இருக்கிறேன். என் மந்தையை அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்வேன். மந்தை மேய்ப்பினின்று அவர்களை நீக்கி விடுவேன். எனவே தாங்களே மேய்ந்துகொள்ளும் அவர்கள் இனி என் மந்தையை மேய்க்க மாட்டார்கள். அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன். அவை இனி அவர்களுக்கு உணவாகா. எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச்சென்று பேணிக் காப்பேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 23: 1-3a. 3b-4. 5. 6 . (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

1ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

2பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.

3aஅவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். – பல்லவி

3bதம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;

4மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். – பல்லவி

5என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. – பல்லவி

6உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபி 4: 12

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16

அக்காலத்தில்

இயேசு கூறியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.

ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.

ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, ‘எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை’ என்றார்கள். அவர் அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்’ என்றார்.

மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம்தான் பெற்றார்கள்.

அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே’ என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார்.

இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 16, 2022 – வ2

அங்கேரி புனித ஸ்தேவான்

வி.நினைவு
புனிதர், புனிதையர் – பொது

முதல் வாசகம்

உன் முழு இதயத்தோடு உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 3-9

அந்நாள்களில்

மோசே மக்களை நோக்கிக் கூறியது: இஸ்ரயேலே, ஆண்டவரின் கட்டளைகளுக்கும் நியமங்களுக்கும் செவிகொடு! அவற்றைச் செயல்படுத்த முனைந்திடு! அதனால், உன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி, பாலும் தேனும் நிறைந்துவழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய்.

இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போதும், எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு. உன் கையில் அடையாளமாக அவற்றைக் கட்டிக்கொள். உன் கண்களுக்கிடையே அடையாளப் பட்டமாக அவை இருக்கட்டும். உன் வீட்டின் கதவு நிலைகளிலும் நுழை வாயில்களிலும் அவற்றை எழுது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 112: 1-2. 3-4. 5-7a. 7b-8. 9 . (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.

அல்லது: அல்லேலூயா.

1ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.

2அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். – பல்லவி

3சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.

4இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். – பல்லவி

5மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.

6எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.

7aதீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது. – பல்லவி

7bஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.

8அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி. – பல்லவி

9அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடி கொள்வோம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்கு உவமையாகக் கூறியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும்பயணம் செல்ல இருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து, அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும், வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.

ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.

நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.

ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ‘ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்’ என்றார்.

அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.

இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ‘ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்’ என்றார்.

அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.

ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரை அணுகி, ‘ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது’ என்றார்.

அதற்கு அவருடைய தலைவர், ‘சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்’ என்று கூறினார்.

எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்து பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்று கூறினார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-23

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்கு உவமையாகக் கூறியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும்பயணம் செல்ல இருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து, அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும், வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.

ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.

நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.

ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ‘ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்’ என்றார்.

அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.

இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ‘ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்’ என்றார்.

அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 16, 2022

பொதுக்காலம் 20ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல; மனிதனே!

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 28: 1-10

அந்நாள்களில்

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: மானிடா! தீர் நகரின் மன்னனுக்குச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இதயத்தின் செருக்கில், ‘நானே கடவுள்; நான் கடல் நடுவே கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறேன்’ என்று சொல்கின்றாய். ஆனால் நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல; மனிதனே! தானியேலைவிட நீ அறிவாளிதான்! மறைபொருள் எதுவும் உனக்கு மறைவாயில்லை! உன் ஞானத்தாலும் அறிவாலும் உனக்குச் செல்வம் சேர்த்தாய்; உன் கருவூலத்தில் பொன்னையும் வெள்ளியையும் குவித்தாய். உன் வாணிபத் திறமையால் உன் செல்வத்தைப் பெருக்கினாய்; உன் செல்வத்தினாலோ உன் இதயம் செருக்குற்றது.

ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: கடவுளைப் போல் அறிவாளி என உன்னைக் கருதிக் கொள்வதால், மக்களினங்களில் மிகவும் கொடியோரான அன்னியரை உனக்கெதிராய் எழும்பச் செய்வேன்; அவர்கள் உன் அழகுக்கும் ஞானத்திற்கும் எதிராக உருவிய வாளுடன் வருவர்; உன் பெருமையைக் குலைப்பர். படுகுழியில் தள்ளுவர் உன்னை; கடல் நடுவே மூழ்கிச் சாவோரெனச் சாவாய் நீயே! அப்போது உன்னைக் கொல்வோரின் நடுவில் ‘நானே கடவுள்’ என்று சொல்வாயே? உன்னைக் குத்திக் கிழிப்போரின் கையில் நீ கடவுளாக அல்ல, மனிதனாகவே இருப்பாய். விருத்தசேதனம் செய்யப்படாதவனைப் போல் அன்னியர் கையால் நீ சாவாய். நானே உரைத்தேன் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

இச 32: 26-27. 28,30. 35cd-36ab . (பல்லவி: 39c)

பல்லவி: கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே!

26நான் சொன்னேன்: அவர்களை எத்திக்கிலும் சிதறடிப்பேன்; அவர்களது நினைவு மனிதரிடமிருந்து அற்றுப் போகச் செய்வேன்.

27ஆயினும், ‘எங்கள் கைகள் வலிமையானவை! இதையெல்லாம் ஆண்டவர் செய்யவில்லை!’ என்று அவர்களின் பகைவர் திரித்துப் பேசுவர் என்பதாலும் பகைவனின் பழிச் சொல்லுக்கு அஞ்சியும் வாளாவிருந்தேன். – பல்லவி

28அவர்கள் புத்தி கெட்ட மக்கள்; அவர்களிடம் விவேகம் சிறிதும் இல்லை.

30ஒரே ஆள் ஆயிரம் பேரைத் துரத்துவதும் இரண்டு பேர் பதினாயிரம் பேரை விரட்டுவதும் அவர்களது பாறை அவர்களை விற்றுவிட்டதாலன்றோ? அவர்களின் கடவுள் அவர்களைக் கைவிட்டதாலன்றோ? – பல்லவி

35cdஅவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது; அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமாகின்றன.

36abஅவர்கள் ஆற்றல் இழந்துவிட்டவர்கள் எனவும் அடிமையோ குடிமகனோ எவனுமில்லை எனவும் காணும்போது ஆண்டவரே அவர் மக்களுக்குத் தீர்ப்பிடுவார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 8: 9

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 23-30

அக்காலத்தில்

இயேசு தம் சீடரிடம், “செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்: செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார்.

சீடர்கள் இதைக் கேட்டு, “அப்படியானால் யார்தாம் மீட்புப் பெற முடியும்?” என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்.

அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார்.

அதற்கு இயேசு, “புதுப் படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நில புலங்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்.

ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்” என்று அவர்களிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 15, 2022 – திருவிழிப்புத் திருப்பலி

தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு
திருவிழிப்புத் திருப்பலி

பெருவிழா

முதல் வாசகம்

கடவுளின் பேழையைக் கொண்டு வந்து, தாவீது அதற்கென்று அமைத்திருந்த கூடாரத்தின் நடுவே வைத்தனர்.

குறிப்பேடு முதல் நூலிலிருந்து வாசகம் 15: 3-4, 15-16; 16: 1-2

அந்நாள்களில்

ஆண்டவரின் பேழைக்கெனத் தாம் ஏற்பாடு செய்திருந்த இடத்துக்கு அதைக் கொண்டு வரும்படி தாவீது இஸ்ரயேலர் அனைவரையும் எருசலேமில் ஒன்று திரட்டினார். அவ்வாறே தாவீது ஆரோனின் புதல்வரையும் லேவியரையும் ஒன்று திரட்டினார்.

பின்பு லேவியர், மோசேயின் கட்டளையாகத் தந்த ஆண்டவரது வாக்கின்படி, கடவுளின் பேழையை அதன் தண்டுகளால் தங்கள் தோள்மேல் சுமந்து வந்தனர். தாவீது, லேவியரின் தலைவர்களிடம் தங்கள் உறவின் முறையிலிருந்து தம்புரு, சுரமண்டலம், கைத்தாளம் ஆகிய கருவிகளை இசைத்து மகிழ்ச்சி ஒலி எழுப்பக்கூடிய பாடகரை நியமிக்கக் கட்டளையிட்டார்.

அவர்கள் கடவுளின் பேழையைக் கொண்டு வந்து, தாவீது அதற்கென்று அமைத்திருந்த கூடாரத்தின் நடுவே வைத்தனர். பின்பு கடவுளின் முன் எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினர்.

தாவீது எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்திய பின்பு மக்களுக்கு ஆண்டவரின் பெயரால் ஆசி வழங்கினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 132: 6-7. 9-10. 13-14 . (பல்லவி: 8)

பல்லவி: ஆண்டவரே! உம் பேழையுடன் உமது உறைவிடம் எழுந்தருள்வீர்!

6திருப்பேழை எப்ராத்தாவில் இருப்பதாய்க் கேள்விப்பட்டோம்; வனவெளியில் அதைக் கண்டுபிடித்தோம்.

7“அவரது உறைவிடத்திற்குச் செல்வோம்! வாருங்கள்; அவரது திருவடிதாங்கி முன் வீழ்ந்து பணிவோம்!” என்றோம். – பல்லவி

9உம் குருக்கள் நீதியை ஆடையென அணிவார்களாக! உம் அன்பர்கள் அக்களிப்பார்களாக!

10நீர் திருப்பொழிவு செய்த அரசரை, உம் ஊழியராகிய தாவீதின் பொருட்டுப் புறக்கணியாதேயும். – பல்லவி

13ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்; அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார்.

14இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்; இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன். – பல்லவி

இரண்டாம் வாசகம்

இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 54-57

சகோதரர் சகோதரிகளே,

அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்து கொள்ளும்போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்: “சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?”

பாவமே சாவின் கொடுக்கு. பாவத்துக்கு வலிமை தருவது திருச்சட்டமே. ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-28

அக்காலத்தில் இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்று குரலெழுப்பிக் கூறினார்.

அவரோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 15, 2022 – பெருவிழாத் திருப்பலி

தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு
பெருவிழாத் திருப்பலி

பெருவிழா

முதல் வாசகம்

பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 11: 19a; 12: 1-6, 10ab

விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது: பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார். அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடுந்துயருடன் கதறினார்.

வானில் வேறோர் அடையாளமும் தோன்றியது; இதோ நெருப்பு மயமான பெரிய அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. அதன் தலைகளில் ஏழு மணி முடிகள் இருந்தன. அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது இழுத்துப்போட்டது. பேறுகால வேதனையிலிருந்த அப்பெண், பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்றுகொண்டிருந்தது.

எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணை இருந்த இடத்துக்குப் பறித்துச் செல்லப்பெற்றது. அப்பெண் பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்; அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாள் அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது: “இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 45: 9. 10-11. 15 . (பல்லவி: 9b)

பல்லவி: ஓபீரின் பொன் அணிந்து வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!

9அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்; ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி! – பல்லவி

10கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு.

11உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! – பல்லவி

15மன்னவரின் மாளிகைக்குள் நுழையும் போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். – பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 20-26

சகோதரர் சகோதரிகளே,

இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்தது போல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர். ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர் பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர் பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர். அதன் பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்து விட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார்.

எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும் வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மரியா விண்ணகத்திற்கு எடுக்கப்பட்டார்; வானகத் தூதரணிகள் மகிழ்கின்றன. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56

அந்நாள்களில்

மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.

மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில்,

“பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.

அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்:

“ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.

அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.”

மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 14, 2022

பொதுக்காலம் 20ஆம் வாரம் – ஞாயிறு

முதல் வாசகம்

நாடெங்கும் வழக்குக் காரணமாய் இருக்கும்படி என்னைப் பெற்றாயே!

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 38: 4-6, 8-10

அந்நாள்களில்

தலைவர்கள் அரசனைப் பார்த்து, “இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாக வேண்டும்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இந்நகரில் எஞ்சியுள்ள போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச்செய்து வருகிறான். இந்த ஆள் இம்மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை” என்றார்கள்.

அதற்கு அரசன் செதேக்கியா, “நன்று. அவனை உங்களிடமே கையளிக்கிறேன். ஏனெனில் உங்களைப் பகைத்துக்கொண்டு அரசனால் எதுவும் செய்ய இயலாதே” என்றான். எனவே அவர்கள் எரேமியாவைப் பிடித்து, காவல் கூடத்தில் அரச மகன் மல்கியாவுக்குச் சொந்தமான பாழ்ங்கிணற்றுக்குள் கயிற்றில் கட்டி அவரைக் கீழே இறக்கிவிட்டார்கள். அக்கிணற்றில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது. எனவே எரேமியா சேற்றுக்குள் புதையத் தொடங்கினார்.

எபேது மெலேக்கு அரண்மனையினின்று வெளியே சென்று அரசனை நோக்கி, “என் தலைவரே! என் அரசரே! இறைவாக்கினர் எரேமியாவைப் பாழ்ங்கிணற்றில் தள்ளியதால் இம்மனிதர்கள் பாவம் செய்தார்கள். அவர் அங்குப் பட்டினியால் மடிந்துபோவார்; ஏனெனில் நகரில் அப்பம் ஏதும் கிடையாது” என்று கூறினார்.

அதைக் கேட்ட அரசன் எத்தியோப்பியரான எபேது மெலேக்கை நோக்கி, “உன்னோடு மூன்று பேரை இங்கிருந்து கூட்டிச்செல். இறைவாக்கினர் எரேமியா சாவதற்கு முன்பே கிணற்றினின்று அவரைத் தூக்கிவிடு” என்று கட்டளையிட்டான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 40: 1. 2. 3. 17 . (பல்லவி: 13b)

பல்லவி: ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.

1நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். – பல்லவி

2அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். – பல்லவி

3புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர். – பல்லவி

17நானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். – பல்லவி

இரண்டாம் வாசகம்

நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-4

சகோதரர் சகோதரிகளே,

திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடைய இருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து தளர்ந்து போக மாட்டீர்கள். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 49-53

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்.

மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 13, 2022 – வ2

புனிதர்கள் திருத்தந்தை போன்சியானு, மறைப்பணியாளர் இப்போலித்து – மறைச்சாட்சியர்

வி.நினைவு
மறைச்சாட்சியர் – பொது அல்லது மறைப்பணியாளர் – பொது

முதல் வாசகம்

கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் பங்குகொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-19

அன்பிற்குரியவர்களே,

துன்பத் தீயில் நீங்கள் சோதிக்கப்படும்போது, ஏதோ எதிர்பாராதது நேர்ந்துவிட்டதென வியக்காதீர்கள். மாறாக, கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணைப் பங்குகொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்.

கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும். ஆனால், உங்களுக்கு வரும் துன்பங்கள், நீங்கள் கொலைஞராகவோ, திருடராகவோ, தீமை செய்பவராகவோ, பிறர் காரியங்களில் தலையிடுபவராகவோ இருப்பதால் வந்தவையாய் இருக்கக் கூடாது. மாறாக, நீங்கள் கிறிஸ்தவராய் இருப்பதால் துன்புற்றால், அதற்காக வெட்கப்படலாகாது. அந்தப் பெயரின் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழுங்கள்.

ஏனெனில், தீர்ப்புக்கான காலம் கடவுளின் வீட்டாரிடத்தில் தொடங்கி விட்டது. நம்மிடையே அது முதலில் தொடங்குகிறதென்றால், கடவுளின் நற்செய்தியை ஏற்காதவர்களின் முடிவு என்னவாகும்? “நேர்மையாளரே மீட்கப்படுவது அரிதென்றால், இறைப்பற்று இல்லாதோரும், பாவிகளும் தண்டனை பெறுவது திண்ணமன்றோ!”ஆகவே கடவுளின் திருவுளப்படி துன்பப்படுகிறவர்கள் நன்மை செய்வதில் நிலைத்திருந்து படைத்தவரிடம் தங்களை ஒப்படைப்பார்களாக! அவர் நம்பத்தக்கவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 124: 2-3. 4-5. 7b-8 . (பல்லவி: 7a)

பல்லவி: வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்.

2ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,

3அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். – பல்லவி

4அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்;

5கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். – பல்லவி

7bகண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம்.

8ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம். ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 18-21

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உலகு உங்களை வெறுக்கிறது என்றால் அது உங்களை வெறுக்கும் முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது.

பணியாளர் தலைவரை விடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால்தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்! என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள். ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 13, 2022

பொதுக்காலம் 19ஆம் வாரம் – சனி

முதல் வாசகம்

ஒவ்வொரு மனிதரையும் அவருடைய வழிகளைக் கொண்டே நான் தீர்ப்பிடுவேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 1-10, 13b, 30-32

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: ‘புளித்த திராட்சைப் பழங்களைப் பெற்றோர் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம்’ என்னும் பழமொழியை இஸ்ரயேல் நாட்டைக் குறித்து நீங்கள் வழங்குவதன் பொருள் என்ன?

என்மேல் ஆணை! என்கிறார் தலைவராகிய ஆண்டவர். இப்பழமொழி இஸ்ரயேலில் உங்களிடையே வழங்கப்படாது. உயிர் அனைத்தும் எனக்கே சொந்தம். பெற்றோரின் உயிர் என்னுடையது; பிள்ளைகளின் உயிரும் என்னுடையதே. பாவம் செய்யும் உயிரே சாகும்.

ஒருவன் நேர்மையாளனாய் இருந்து நீதியையும், நேர்மையையும் கடைப்பிடித்தால், மலைகளின்மேல் உண்ணாமலும், இஸ்ரயேல் வீட்டாரின் சிலைகளை நோக்கித் தன் கண்களை ஏறெடுக்காமலும், பிறன் மனைவியைக் கறைப்படுத்தாமலும், தீட்டுள்ள பெண்ணை நெருங்காமலும் இருந்தால், அடுத்திருப்பவனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருந்து, கடன் வாங்கியவனுக்கு அடைமானத்தைத் திருப்பிக் கொடுத்து, பசித்தவனுக்குத் தன் உணவைப் பகிர்ந்தளித்து, ஆடையின்றி இருப்பவனுக்கு ஆடை அணிவித்து இருந்தால், வட்டிக்குக் கொடாமலும், கொடுத்ததற்கு அதிகமாய்ப் பெறாமலும் இருந்து, தன் கையால் அநீதி செய்யாது விலகி, மனிதரிடையே எழும் வழக்குகளுக்கு நீதியுடன் தீர்ப்பளித்தால், என் நியமங்களையும் நீதி நெறிகளையும் கடைப்பிடித்து, உண்மையுள்ளவனாக நடந்துகொண்டால், அவன் நீதிமான் ஆவான்; அவன் வாழப்போவது உறுதி, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆனால், அவனுக்குப் பிறந்த மகன் கட்டுக்கடங்காதவனாயும், இரத்தம் சிந்துபவனாகவும், முன் சொல்லியவற்றுள் ஒன்றைப் பிறருக்குச் செய்பவனாகவும் இருந்தால், அவன் வாழமாட்டான். அருவருப்பான இவற்றையெல்லாம் அவன் செய்துள்ளதால் அவன் சாவது உறுதி. அவனது இரத்தப் பழி அவன் மேலேயே இருக்கும்.

எனவே, இஸ்ரயேல் வீட்டாரே! ஒவ்வொரு மனிதரையும் அவருடைய வழிகளைக் கொண்டே நான் தீர்ப்பிடுவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். மனம் மாறி, உங்கள் குற்றங்கள் அனைத்தையும், விட்டு விலகுங்கள். அப்போது தீமை உங்கள் வீழ்ச்சிக்குக் காரணமாய் இராது. எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டு விடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள். இஸ்ரயேல் வீட்டாரே! நீங்கள் ஏன் சாக வேண்டும்? எவருடைய சாவிலும் நான் இன்பம் காண்பதில்லை, என்கிறார் தலைவராகிய ஆண்டவர். எனவே மனம் மாறி வாழ்வு பெறுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 51: 10-11. 12-13. 16-17 . (பல்லவி: 10a)

பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.

10கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.

11உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். – பல்லவி

12உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.

13அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். – பல்லவி

16ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.

17கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 13-15

அக்காலத்தில்

சிறு பிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். ஆனால் இயேசு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது” என்றார். அவர்களைத் தொட்டு ஆசி வழங்கிய பின்பு அவர் அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 12, 2022 – வ2

சாந்தால் நகர் புனித ஜான் பிரான்சிஸ்கா – துறவி

வி.நினைவு
புனிதர், புனிதையர் – பொது (துறவியர்)

முதல் வாசகம்

ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள்.

நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 31: 10-13, 19-20, 30-31

திறமைவாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தை விடப் பெருமதிப்புள்ளவள்.

அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும். அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒரு நாளும் தீங்கு நினையாள். கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலை அனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள்.

இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள். எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள்.

எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள். அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 131: 1. 2. 3

பல்லவி: உம்மோடு நான் அமைதியாய் இருக்க, ஆண்டவரே என் உயிரைக் காத்தருளும்.

1ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை! என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. – பல்லவி

2மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாய் உள்ளது. – பல்லவி

3இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 31b-32

அல்லேலூயா, அல்லேலூயா! என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-35

அக்காலத்தில்

இயேசுவின் தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்றுகொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.

அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. “அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்றுகொண்டு உம்மைத் தேடுகிறார்கள்” என்று அவரிடம் சொன்னார்கள்.

அவர் அவர்களைப் பார்த்து, “என் தாயும் என் சகோதரர்களும் யார்?” என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, “இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 12, 2022

பொதுக்காலம் 19ஆம் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்

என் மாட்சி உன்மேல் பட, உன் அழகு நிறைவுற்று விளங்கிற்று, நீயோ வேசித்தனம் செய்தாய்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 16: 1-15, 60, 63

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! எருசலேமுக்கு அதன் அருவருப்புகளைச் சுட்டிக் காட்டு. நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் எருசலேமுக்குக் கூறுவது இதுவே: நீ தோன்றியதும் பிறந்ததும் கானான் நாட்டிலே, உன் தந்தை ஓர் எமோரியன். உன் தாய் ஓர் இத்தியள். நீ பிறந்த வரலாறு இதுவே: நீ பிறந்த அன்று உன் கொப்பூழ்க் கொடி அறுக்கப்படவில்லை. நீ நீராட்டப்பட்டுத் தூய்மை ஆக்கப்படவில்லை; உப்பு நீரால் கழுவப்படவில்லை; துணிகளால் சுற்றப்படவும் இல்லை; உன்னை இரக்கத்துடன் கண்ணோக்கி உனக்காக வருந்தி, இவற்றுள் ஒன்றையேனும் உனக்குச் செய்வாரில்லை. ஆனால் நீ திறந்த வெளியில் எறியப்பட்டாய்.

ஏனெனில் நீ பிறந்த நாளிலேயே வெறுத்து ஒதுக்கப்பட்டாய். அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னருகில் வந்து உன் இரத்தத்தில் நீ புரள்வதைக் கண்டு, இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, ‘வாழ்ந்திடு’ என்றேன். ஆம், இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, ‘வாழ்ந்திடு’ என்றேன். உன்னை வயல்வெளியில் வளரும் பயிர் போல் உருவாக்கினேன். நீ வளர்ந்து பருவம் எய்தி அழகிய மங்கையானாய். உன் கொங்கைகள் உருப்பெற்றன; உன் கூந்தலும் நீண்டு வளர்ந்தது. ஆயினும் நீ ஆடையின்றித் திறந்த மேனியளாய் நின்றாய்.

அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னை நோக்கினேன். அப்போது நீ காதற் பருவத்தில் இருந்தாய். நான் என் ஆடையை உன்மேல் விரித்து உன் திறந்த மேனியை மூடினேன். உனக்கு உறுதிமொழி தந்து, உன்னோடு உடன்படிக்கை செய்தேன். நீயும் என்னுடையவள் ஆனாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நான் உன்னை நீராட்டி, உன் மேலிருந்த இரத்தத்தைக் கழுவித் துடைத்து, உனக்கு எண்ணெய் பூசினேன். பூப் பின்னல் உடையால் உன்னை உடுத்தி, தோல் காலணிகளை உனக்கு மாட்டி, மெல்லிய துகிலை உனக்கு அணிவித்து, நார்ப் பட்டால் உன்னைப் போர்த்தினேன்.

அணிகலன்களால் உன்னை அழகு செய்தேன்; கைகளுக்குக் காப்புகளும் கழுத்திற்குச் சங்கிலியும் இட்டேன். மூக்குக்கு மூக்குத்தியும், காதுகளுக்குத் தோடுகளும், தலையில் அழகிய மணிமுடியும் அணிவித்தேன். பொன்னாலும், வெள்ளியாலும், நீ அணி செய்யப்பட்டாய். நார்ப் பட்டும் மெல்லிய துகிலும், பூப் பின்னல் ஆடையும் உன் உடைகள் ஆயின. மாவும், தேனும், எண்ணெயும் உன் உணவாயின. நீ மிக மிக அழகு வாய்ந்தவளாகி, அரச தகுதி பெற்றாய். உன் அழகின் காரணமாக உன் புகழ் வேற்றினத்தாரிடையே பரவிற்று. என் மாட்சி உன்மேல்பட உன் அழகு நிறைவுற்று விளங்கிற்று, என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நீயோ உன் அழகில் நம்பிக்கை வைத்து, உன் புகழைப் பணயமாக வைத்து, விலைமகளாகி, வருவோர் போவோரிடம் எல்லாம் வேசித்தனம் செய்தாய்.

ஆயினும் உன் இளமையின் நாள்களில் உன்னோடு செய்த உடன் படிக்கையை நினைவுகூர்ந்து, என்றுமுள உடன்படிக்கையை உன்னோடு செய்வேன்.

நீ செய்ததை எல்லாம் நான் மறைத்திடும்போது, நீ அவற்றை எல்லாம் நினைத்து வெட்கி, இழிவு மிகுதியினால் உன் வாயை ஒருபோதும் திறக்க மாட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

நானே ஆண்டவர் என்பதை நீ அறிந்துகொள்வாய்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 16: 59-63

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: கொடுத்த வாக்கை நீ மீறி, உடன்படிக்கையை முறித்துவிட்டாய். நீ செய்தது போலவே நானும் உனக்குச் செய்வேன். ஆயினும் உன் இளமையின் நாள்களில் உன்னோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, என்றுமுள உடன்படிக்கையை உன்னோடு செய்வேன். உன் தமக்கைகளையும் தங்கைகளையும் நான் உனக்குப் புதல்வியராகத் தருவேன்; நான் உன்னுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை முன்னிட்டு அல்லாமலே தந்திடுவேன்.

அவர்களை நீ பெற்றுக் கொள்ளும்பொழுது உன் நடத்தையை நினைத்து வெட்கமுறுவாய். உன்னுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துவேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீ அறிந்துகொள்வாய். நீ செய்ததை எல்லாம் நான் மறைத்திடும்போது, நீ அவற்றை எல்லாம் நினைத்து வெட்கி, இழிவு மிகுதியினால் உன் வாயை ஒருபோதும் திறக்க மாட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

எசா 12: 2-3. 4bcd. 5-6 . (பல்லவி: 1c)

பல்லவி: ஆண்டவரே, உம் சினம் தணிந்து எனக்கு ஆறுதல் அளித்துள்ளீர்.

2இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.

3மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள். – பல்லவி

4bcdஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். – பல்லவி

5ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக.

6சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 தெச 2: 13

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிட மோசே அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 3-12

அக்காலத்தில்

பரிசேயர் இயேசுவை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன், “ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கி விடுவது முறையா?” என்று கேட்டனர்.

அவர் மறுமொழியாக, “படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்’ என்று நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா?” என்று கேட்டார்.

மேலும் அவர், “இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.

அவர்கள் அவரைப் பார்த்து, “அப்படியானால் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?” என்றார்கள்.

அதற்கு அவர், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை. பரத்தைமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

அவருடைய சீடர்கள் அவரை நோக்கி, “கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்துகொள்ளாதிருப்பதே நல்லது” என்றார்கள். அதற்கு அவர், “அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் பிறவியிலேயே மணஉறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023

Stay Connected

811,367FansLike
205FollowersFollow
14,400SubscribersSubscribe
Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks