பொதுக்காலம் 22ஆம் வாரம் – ஞாயிறு
முதல் வாசகம்
நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 3: 17-18, 20, 28-29
குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்; அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர். நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட. அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும். ஆண்டவரின் ஆற்றல் பெரிது; ஆயினும், தாழ்ந்தோரால் அவர் மாட்சி பெறுகின்றார்.
இறுமாப்புக் கொண்டோரின் நோய்க்கு மருந்து இல்லை; ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றிவிட்டது. நுண்ணறிவாளர் உவமைகளைப் புரிந்து கொள்வர்; ஞானிகள் கேட்டறியும் ஆவல் மிக்கவர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 68: 3-4ac. 5-6ab. 9-10 . (பல்லவி: 10a)
பல்லவி: ஒடுக்கப்பட்டோர்க்கு கடவுளே, மறுவாழ்வு அளித்தீர்.
3நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர்.
4acகடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்; ‘ஆண்டவர்’ என்பது அவர்தம் பெயராம். – பல்லவி
5திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்!
6abதனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். – பல்லவி
9கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்; வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர்.
10உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன; கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர். – பல்லவி
இரண்டாம் வாசகம்
நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை, வாழும் கடவுளின் நகர்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 18-19, 22-24a
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் வந்து சேர்ந்திருப்பது தொட்டுணரக்கூடிய, தீப்பற்றியெரிகின்ற, இருள் சூழ்ந்த, மந்தாரமான, சுழல் காற்று வீசுகின்ற சீனாய் மலை அல்ல. அங்கு எக்காளம் முழங்கிற்று; பேசும் குரலொன்று கேட்டது. அக்குரலைக் கேட்டவர்கள் அதற்குமேல் தங்களோடு அது ஒரு வார்த்தை கூடப் பேசவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள்.
ஆனால் நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை வாழும் கடவுளின் நகர்; விண்ணக எருசலேம். அதனைப் பல்லாயிரக்கணக்கான வானதூதர் சூழ்ந்துள்ளனர். விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை விழாக் கூட்டமென அங்கே கூடியுள்ளது. நிறைவு பெற்ற நேர்மையாளர்களோடு சேர்ந்து, அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும், புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 29ab
அல்லேலூயா, அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1, 7-14
அக்காலத்தில்
ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.
விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை: “ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ‘இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’ என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ‘நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்’ எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்.”
பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, “நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
Thanks 👍🙏