பொதுக்காலம் 19ஆம் வாரம் – செவ்வாய்
முதல் வாசகம்
“நான் உனக்குத் தருகின்ற இச்சுருளேட்டைத் தின்று உன் வயிற்றை நிரப்பு” என்றார். அச்சுருளேடு என் வாயில் தேன்போல் இனித்தது.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 2: 8- 3: 4
ஆண்டவர் கூறுவது: “நீயோ மானிடா! நான் உனக்குச் சொல்வதைக் கேள். அந்தக் கலக வீட்டாரைப் போல் நீயும் கலகக்காரனாய் இருந்து விடாதே. உன் வாயைத் திறந்து நான் உனக்குத் தருவதைத் தின்றுவிடு” என்றார். அப்போது என்னை நோக்கி ஒரு கை நீள்வதைக் கண்டேன். அதில் சுருளேடு ஒன்று இருந்தது. அவர் அச்சுருளேட்டை என் முன் விரித்தார். உள்ளும் புறமும் எழுதப்பட்டிருந்த அதில் கதறல்களும் புலம்பல்களும் கேடுகளும் எழுதப்பட்டிருந்தன.
அவர் என்னை நோக்கி, “மானிடா! நீ காண்பதைத் தின்றுவிடு. இச்சுருளேட்டைத் தின்றபின் இஸ்ரயேல் வீட்டாரிடம் போய்ப் பேசு” என்றார். நானும் என் வாயைத் திறக்க, அவர் அச்சுருளேட்டை எனக்குத் தின்னக் கொடுத்தார். மேலும் அவர் என்னை நோக்கி, “மானிடா! நான் உனக்குத் தருகின்ற இச்சுருளேட்டைத் தின்று உன் வயிற்றை நிரப்பு” என்றார். நானும் தின்றேன். அது என் வாயில் தேன் போல் இனித்தது. மேலும் அவர் என்னை நோக்கி, “மானிடா! புறப்படு. இஸ்ரயேல் வீட்டாரிடம் போய் என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக் கூறு” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 119: 14,24. 72,103. 111,131 . (பல்லவி: 103a)
பல்லவி: உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை!
14பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவதுபோல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.
24ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவையே எனக்கு அறிவுரையாளர். – பல்லவி
72நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளைவிட எனக்கு மேலானது.
103உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை. – பல்லவி
111உம் ஒழுங்குமுறைகளை என்றும் என் உரிமைச் சொத்தாய்க் கொண்டுள்ளேன். ஆகவே, அவை என் இதயத்தை மகிழ்விக்கின்றன.
131வாயை ‘ஆ’வெனத் திறக்கின்றேன்; பெருமூச்சு விடுகின்றேன்; ஏனெனில், உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 29ab
அல்லேலூயா, அல்லேலூயா! என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10-14
அக்காலத்தில்
சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்:
“நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.
இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில் மானிடமகன் நெறி தவறியோரை மீட்கவே வந்தார்.
இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப் பகுதியில் விட்டுவிட்டு, வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா? அவர் அதைக் கண்டுபிடித்தால், வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதை விட, வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப் பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக் கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.