புனித பர்த்தலமேயு – திருத்தூதர்
முதல் வாசகம்
பன்னிரண்டு அடிக்கற்களின் மீதும் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 9b-14
சகோதரர் சகோதரிகளே,
ஏழு வானதூதர்களுள் ஒருவர் வந்து, “வா, ஆட்டுக்குட்டி மணந்து கொண்ட மணமகளை உனக்குக் காட்டுவேன்” என்று என்னிடம் கூறினார்.
தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே, அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டு சென்றார்; திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கி வருவதை எனக்குக் காட்டினார். அதில் கடவுளின் மாட்சி விளங்கிற்று; விலையுயர்ந்த கல் போன்றும் படிகக் கல் போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங்கியது.
அதைச் சுற்றிப் பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன. வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள். இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை அமைந்திருந்தன. நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 145: 10-11. 12-13ab. 17-18 . (பல்லவி: 12 காண்க)
பல்லவி: ஆண்டவரே, உம் அன்பர்கள் உமதரசின் மாட்சியை அறிவிப்பார்கள்.
10ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். – பல்லவி
12மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
13abஉமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. – பல்லவி
17ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.
18தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 1: 49b
அல்லேலூயா, அல்லேலூயா! ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 45-51
அக்காலத்தில்
பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, “இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டு கொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார்.
அதற்கு நத்தனியேல், “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று கூறினார்.
நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார்.
நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்தி மரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார்.
நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.
அதற்கு இயேசு, “உம்மை அத்திமரத்தின் கீழ்க் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார். மேலும், “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.