புனிதர்கள் திருத்தந்தை போன்சியானு, மறைப்பணியாளர் இப்போலித்து – மறைச்சாட்சியர் (வி.நினைவு)
பொதுக்காலம் 19ஆம் வாரம் – சனி
முதல் வாசகம்
ஒவ்வொரு மனிதரையும் அவருடைய வழிகளைக் கொண்டே நான் தீர்ப்பிடுவேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 1-10, 13b, 30-32
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: ‘புளித்த திராட்சைப் பழங்களைப் பெற்றோர் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம்’ என்னும் பழமொழியை இஸ்ரயேல் நாட்டைக் குறித்து நீங்கள் வழங்குவதன் பொருள் என்ன?
என்மேல் ஆணை! என்கிறார் தலைவராகிய ஆண்டவர். இப்பழமொழி இஸ்ரயேலில் உங்களிடையே வழங்கப்படாது. உயிர் அனைத்தும் எனக்கே சொந்தம். பெற்றோரின் உயிர் என்னுடையது; பிள்ளைகளின் உயிரும் என்னுடையதே. பாவம் செய்யும் உயிரே சாகும்.
ஒருவன் நேர்மையாளனாய் இருந்து நீதியையும், நேர்மையையும் கடைப்பிடித்தால், மலைகளின்மேல் உண்ணாமலும், இஸ்ரயேல் வீட்டாரின் சிலைகளை நோக்கித் தன் கண்களை ஏறெடுக்காமலும், பிறன் மனைவியைக் கறைப்படுத்தாமலும், தீட்டுள்ள பெண்ணை நெருங்காமலும் இருந்தால், அடுத்திருப்பவனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருந்து, கடன் வாங்கியவனுக்கு அடைமானத்தைத் திருப்பிக் கொடுத்து, பசித்தவனுக்குத் தன் உணவைப் பகிர்ந்தளித்து, ஆடையின்றி இருப்பவனுக்கு ஆடை அணிவித்து இருந்தால், வட்டிக்குக் கொடாமலும், கொடுத்ததற்கு அதிகமாய்ப் பெறாமலும் இருந்து, தன் கையால் அநீதி செய்யாது விலகி, மனிதரிடையே எழும் வழக்குகளுக்கு நீதியுடன் தீர்ப்பளித்தால், என் நியமங்களையும் நீதி நெறிகளையும் கடைப்பிடித்து, உண்மையுள்ளவனாக நடந்துகொண்டால், அவன் நீதிமான் ஆவான்; அவன் வாழப்போவது உறுதி, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
ஆனால், அவனுக்குப் பிறந்த மகன் கட்டுக்கடங்காதவனாயும், இரத்தம் சிந்துபவனாகவும், முன் சொல்லியவற்றுள் ஒன்றைப் பிறருக்குச் செய்பவனாகவும் இருந்தால், அவன் வாழமாட்டான். அருவருப்பான இவற்றையெல்லாம் அவன் செய்துள்ளதால் அவன் சாவது உறுதி. அவனது இரத்தப் பழி அவன் மேலேயே இருக்கும்.
எனவே, இஸ்ரயேல் வீட்டாரே! ஒவ்வொரு மனிதரையும் அவருடைய வழிகளைக் கொண்டே நான் தீர்ப்பிடுவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். மனம் மாறி, உங்கள் குற்றங்கள் அனைத்தையும், விட்டு விலகுங்கள். அப்போது தீமை உங்கள் வீழ்ச்சிக்குக் காரணமாய் இராது. எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டு விடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள். இஸ்ரயேல் வீட்டாரே! நீங்கள் ஏன் சாக வேண்டும்? எவருடைய சாவிலும் நான் இன்பம் காண்பதில்லை, என்கிறார் தலைவராகிய ஆண்டவர். எனவே மனம் மாறி வாழ்வு பெறுங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 51: 10-11. 12-13. 16-17 . (பல்லவி: 10a)
பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.
10கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.
11உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். – பல்லவி
12உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
13அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். – பல்லவி
16ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
17கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 25 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 13-15
அக்காலத்தில்
சிறு பிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். ஆனால் இயேசு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது” என்றார். அவர்களைத் தொட்டு ஆசி வழங்கிய பின்பு அவர் அவ்விடத்தை விட்டுச் சென்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.