புனிதர்கள் திருத்தந்தை போன்சியானு, மறைப்பணியாளர் இப்போலித்து – மறைச்சாட்சியர் (வி.நினைவு)
புனிதர்கள் திருத்தந்தை போன்சியானு, மறைப்பணியாளர் இப்போலித்து – மறைச்சாட்சியர்
முதல் வாசகம்
கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் பங்குகொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-19
அன்பிற்குரியவர்களே,
துன்பத் தீயில் நீங்கள் சோதிக்கப்படும்போது, ஏதோ எதிர்பாராதது நேர்ந்துவிட்டதென வியக்காதீர்கள். மாறாக, கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணைப் பங்குகொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்.
கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும். ஆனால், உங்களுக்கு வரும் துன்பங்கள், நீங்கள் கொலைஞராகவோ, திருடராகவோ, தீமை செய்பவராகவோ, பிறர் காரியங்களில் தலையிடுபவராகவோ இருப்பதால் வந்தவையாய் இருக்கக் கூடாது. மாறாக, நீங்கள் கிறிஸ்தவராய் இருப்பதால் துன்புற்றால், அதற்காக வெட்கப்படலாகாது. அந்தப் பெயரின் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழுங்கள்.
ஏனெனில், தீர்ப்புக்கான காலம் கடவுளின் வீட்டாரிடத்தில் தொடங்கி விட்டது. நம்மிடையே அது முதலில் தொடங்குகிறதென்றால், கடவுளின் நற்செய்தியை ஏற்காதவர்களின் முடிவு என்னவாகும்? “நேர்மையாளரே மீட்கப்படுவது அரிதென்றால், இறைப்பற்று இல்லாதோரும், பாவிகளும் தண்டனை பெறுவது திண்ணமன்றோ!”ஆகவே கடவுளின் திருவுளப்படி துன்பப்படுகிறவர்கள் நன்மை செய்வதில் நிலைத்திருந்து படைத்தவரிடம் தங்களை ஒப்படைப்பார்களாக! அவர் நம்பத்தக்கவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 124: 2-3. 4-5. 7b-8 . (பல்லவி: 7a)
பல்லவி: வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்.
2ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,
3அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். – பல்லவி
4அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்;
5கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். – பல்லவி
7bகண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம்.
8ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம். ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 18-21
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உலகு உங்களை வெறுக்கிறது என்றால் அது உங்களை வெறுக்கும் முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது.
பணியாளர் தலைவரை விடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால்தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்! என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள். ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.”
ஆண்டவரின் அருள்வாக்கு.