பொதுக்காலம் 21ஆம் வாரம் – செவ்வாய்
முதல் வாசகம்
எங்கள் வாய்மொழி, திருமுகம் வழியாக அறிவிக்கப்பட்டவற்றில் நிலையாய் இருங்கள்.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-3a, 14-17
சகோதரர் சகோதரிகளே! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றியும் அவரோடு நாம் ஒன்று கூடுவதைப் பற்றியும் உங்களுக்கு நாங்கள் கூற விழைவது: ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என, இறைவாக்காகவோ அருளுரையாகவோ நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனே மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்; திகிலுறவும் வேண்டாம். எவரும் உங்களை எவ்வகையிலும் ஏமாற்ற இடம் கொடாதீர்.
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். ஆகவே அன்பர்களே! எங்கள் வாய்மொழி வழியாகவோ திருமுகம் வழியாகவோ அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக்கொண்டு அவற்றில் நிலையாயிருங்கள். நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக!
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 96: 10. 11-12a. 12b-13 . (பல்லவி: 13ab)
பல்லவி: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க ஆண்டவர் வருகின்றார்.
10வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். – பல்லவி
11விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.
12aவயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும். – பல்லவி
12bஅப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும்.
13ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
எபி 4: 12
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 23-26
அக்காலத்தில்
இயேசு கூறியது: “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப் பிடிக்காமல் விட்டுவிடுகிறீர்கள். இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப் பிடிக்கவேண்டும். அவற்றையும் விட்டுவிடக் கூடாது. குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள்.
வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.