பொதுக்காலம் 20ஆம் வாரம் – சனி
முதல் வாசகம்
ஆண்டவரின் மாட்சி கோவிலினுள் நுழைந்தது.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 43: 1-7ab
அந்நாள்களில்
மனிதர் ஒருவர் கோவிலின் கிழக்கு நோக்கிய வாயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். இதோ ‘இஸ்ரயேலின் ஆண்டவரது மாட்சி’ கிழக்குப் பகுதியிலிருந்து வருவதைக் கண்டேன். அவரது குரல் பெருவெள்ளத்தின் இரைச்சல் போல் இருந்தது. நிலமோ அவரின் மாட்சியால் ஒளி வீசிற்று. நான் கண்ட காட்சி, அவர் நகரை அழிக்க வந்தபோது நான் கண்டது போன்றும், கேபார் ஆற்றோரம் நான் கண்டது போன்றும் இருந்தது. நான் முகங்குப்புற விழுந்தேன்.
ஆண்டவரின் மாட்சி கிழக்கு நோக்கிய வாயில் வழி கோவிலினுள் நுழைந்தது. பின்னர் ஆவி என்னைத் தூக்கி உள்முற்றத்திற்கு அழைத்துச் சென்றது. ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பிற்று.
அம்மனிதர் என்னருகில் நிற்கையில் கோவிலிலிருந்து வேறொருவர் என்னுடன் பேசுவதைக் கேட்டேன். அவர் உரைத்தது: “மானிடா! இது என் அரியணையின் இடம்; என் கால்மணைக்கான இடம். இங்குதான் நான் இஸ்ரயேலருடன் என்றென்றும் வாழ்வேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 85: 8ab-9. 10-11. 12-13 . (பல்லவி: 9b)
பல்லவி: நம் நாட்டில் ஆண்டவரது மாட்சி குடிகொள்ளும்.
8abஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;
9அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். – பல்லவி
10பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். – பல்லவி
12நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.
13நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 23: 9b, 10b
அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மறைநூல் அறிஞரும் பரிசேயரும் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 1-12
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: “மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வர மாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள்.
ஆனால் நீங்கள் ‘ரபி’ என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.
உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.