சாந்தால் நகர் புனித ஜான் பிரான்சிஸ்கா – துறவி
முதல் வாசகம்
ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள்.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 31: 10-13, 19-20, 30-31
திறமைவாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தை விடப் பெருமதிப்புள்ளவள்.
அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும். அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒரு நாளும் தீங்கு நினையாள். கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலை அனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள்.
இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள். எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள்.
எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள். அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 131: 1. 2. 3
பல்லவி: உம்மோடு நான் அமைதியாய் இருக்க, ஆண்டவரே என் உயிரைக் காத்தருளும்.
1ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை! என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. – பல்லவி
2மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாய் உள்ளது. – பல்லவி
3இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு! – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 8: 31b-32
அல்லேலூயா, அல்லேலூயா! என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-35
அக்காலத்தில்
இயேசுவின் தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்றுகொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.
அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. “அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்றுகொண்டு உம்மைத் தேடுகிறார்கள்” என்று அவரிடம் சொன்னார்கள்.
அவர் அவர்களைப் பார்த்து, “என் தாயும் என் சகோதரர்களும் யார்?” என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, “இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.