தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு – திருவிழிப்புத் திருப்பலி
தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு
திருவிழிப்புத் திருப்பலி
முதல் வாசகம்
கடவுளின் பேழையைக் கொண்டு வந்து, தாவீது அதற்கென்று அமைத்திருந்த கூடாரத்தின் நடுவே வைத்தனர்.
குறிப்பேடு முதல் நூலிலிருந்து வாசகம் 15: 3-4, 15-16; 16: 1-2
அந்நாள்களில்
ஆண்டவரின் பேழைக்கெனத் தாம் ஏற்பாடு செய்திருந்த இடத்துக்கு அதைக் கொண்டு வரும்படி தாவீது இஸ்ரயேலர் அனைவரையும் எருசலேமில் ஒன்று திரட்டினார். அவ்வாறே தாவீது ஆரோனின் புதல்வரையும் லேவியரையும் ஒன்று திரட்டினார்.
பின்பு லேவியர், மோசேயின் கட்டளையாகத் தந்த ஆண்டவரது வாக்கின்படி, கடவுளின் பேழையை அதன் தண்டுகளால் தங்கள் தோள்மேல் சுமந்து வந்தனர். தாவீது, லேவியரின் தலைவர்களிடம் தங்கள் உறவின் முறையிலிருந்து தம்புரு, சுரமண்டலம், கைத்தாளம் ஆகிய கருவிகளை இசைத்து மகிழ்ச்சி ஒலி எழுப்பக்கூடிய பாடகரை நியமிக்கக் கட்டளையிட்டார்.
அவர்கள் கடவுளின் பேழையைக் கொண்டு வந்து, தாவீது அதற்கென்று அமைத்திருந்த கூடாரத்தின் நடுவே வைத்தனர். பின்பு கடவுளின் முன் எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினர்.
தாவீது எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்திய பின்பு மக்களுக்கு ஆண்டவரின் பெயரால் ஆசி வழங்கினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 132: 6-7. 9-10. 13-14 . (பல்லவி: 8)
பல்லவி: ஆண்டவரே! உம் பேழையுடன் உமது உறைவிடம் எழுந்தருள்வீர்!
6திருப்பேழை எப்ராத்தாவில் இருப்பதாய்க் கேள்விப்பட்டோம்; வனவெளியில் அதைக் கண்டுபிடித்தோம்.
7“அவரது உறைவிடத்திற்குச் செல்வோம்! வாருங்கள்; அவரது திருவடிதாங்கி முன் வீழ்ந்து பணிவோம்!” என்றோம். – பல்லவி
9உம் குருக்கள் நீதியை ஆடையென அணிவார்களாக! உம் அன்பர்கள் அக்களிப்பார்களாக!
10நீர் திருப்பொழிவு செய்த அரசரை, உம் ஊழியராகிய தாவீதின் பொருட்டுப் புறக்கணியாதேயும். – பல்லவி
13ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்; அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார்.
14இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்; இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன். – பல்லவி
இரண்டாம் வாசகம்
இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 54-57
சகோதரர் சகோதரிகளே,
அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்து கொள்ளும்போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்: “சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?”
பாவமே சாவின் கொடுக்கு. பாவத்துக்கு வலிமை தருவது திருச்சட்டமே. ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 11: 28
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-28
அக்காலத்தில் இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்று குரலெழுப்பிக் கூறினார்.
அவரோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.