புனித மரியா பவுஸ்தீனா கோவால்ஸ்கா
முதல் வாசகம்
அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்து கொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக!
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 14-19
சகோதரர் சகோதரிகளே,
விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உண்மையிலேயே குடும்பமாய் விளங்குவதற்குக் காரணமாய் இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன். அவருடைய அளவற்ற மாட்சிக்கேற்ப உங்கள் உள்ளத்திற்கு வல்லமையும் ஆற்றலும் தம் தூய ஆவி வழியாகத் தந்தருள்வாராக! நம்பிக்கையின் வழியாக, கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் குடிகொள்வாராக! அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக! இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்து கொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! அதன்மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக!
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 103: 1-2. 3-4. 8-9. 13-14. 17-18 . (பல்லவி: 1a)
பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
1என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! – பல்லவி
3அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
4அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். – பல்லவி
8ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
9அவர் எப்பொழுதும் கடிந்து கொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். – பல்லவி
13தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்.
14அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது. – பல்லவி
17ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்; அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீதும் இருக்கும்.
18அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 28
அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-30
அக்காலத்தில்
இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.
என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.
மேலும் அவர், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.
ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.