புனித அலோசியுஸ் கொன்சாகா – துறவி
முதல் வாசகம்
உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-5
அன்பிற்குரியவர்களே,
இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர்.
நாம் கடவுள்மீது அன்பு கொண்டு அவர் கட்டளைகளைக் கடைப் பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள் மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை.
ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே. இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 16: 1-2a,5. 7-8. 11 . (பல்லவி: 5a)
பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.
1இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
2aநான் ஆண்டவரிடம் ’நீரே என் தலைவர்’ என்று சொன்னேன்.
5ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. – பல்லவி
7எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில் கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
8ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். – பல்லவி
11வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 13: 34
அல்லேலூயா, அல்லேலூயா! ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40
அக்காலத்தில்
இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார்.
அவர், “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன” என்று பதிலளித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.