Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – ஜூன் 22, 2022 – வ3

திருப்பலி வாசகங்கள் – ஜூன் 22, 2022 – வ3

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

புனிதர்கள் ஆயர் ஜான் பிசர், தாமஸ் மூர் – மறைச்சாட்சியர்

வி.நினைவு
மறைச்சாட்சியர் – பொது

முதல் வாசகம்

கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் பங்குகொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-19

அன்பிற்குரியவர்களே,

துன்பத் தீயில் நீங்கள் சோதிக்கப்படும் போது, ஏதோ எதிர்பாராதது நேர்ந்துவிட்டதென வியக்காதீர்கள். மாறாக, கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணைப் பங்குகொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்.

கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும். ஆனால், உங்களுக்கு வரும் துன்பங்கள், நீங்கள் கொலைஞராகவோ, திருடராகவோ, தீமை செய்பவராகவோ, பிறர் காரியங்களில் தலையிடுபவராகவோ இருப்பதால் வந்தவையாய் இருக்கக்கூடாது. மாறாக, நீங்கள் கிறிஸ்தவராய் இருப்பதால் துன்புற்றால், அதற்காக வெட்கப்படலாகாது. அந்தப் பெயரின் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழுங்கள்.

ஏனெனில், தீர்ப்புக்கான காலம் கடவுளின் வீட்டாரிடத்தில் தொடங்கி விட்டது. நம்மிடையே அது முதலில் தொடங்குகிறதென்றால், கடவுளின் நற்செய்தியை ஏற்காதவர்களின் முடிவு என்னவாகும்? “நேர்மையாளரே மீட்கப்படுவது அரிது என்றால், இறைப்பற்று இல்லாதோரும், பாவிகளும் தண்டனை பெறுவது திண்ணமன்றோ!”ஆகவே கடவுளின் திருவுளப்படி துன்பப்படுகிறவர்கள் நன்மை செய்வதில் நிலைத்திருந்து படைத்தவரிடம் தங்களை ஒப்படைப்பார்களாக! அவர் நம்பத்தக்கவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 . (பல்லவி: 5)

பல்லவி: கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.

1சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர்போல இருந்தோம்.

2abஅப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. – பல்லவி

2cd“ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்” என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

3ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். – பல்லவி

4ஆண்டவரே, தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.

5கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். – பல்லவி

6விதை எடுத்துச் செல்லும்போது – செல்லும்போது – அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது – வரும்போது – அக்களிப்போடு வருவார்கள். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 10

அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 34-39

அக்காலத்தில்

இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கூறியது: “நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.

என்னை விடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். என்னை விடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.

தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

The readings on this page are taken from the Douay-Rheims Catholic Bible. You can also read the Mass Readings taken from the New Jerusalem Bible, which is used at Mass in most of the English-speaking world. (References, Copyrights).
ஜூன்-2022 ஜூலை ►
ஞா 5 12 19 26
தி 6 13 20 27
செ 7 14 21 28
பு 1 8 15 22 29
வி 2 9 16 23 30
வெ 3 10 17 24
ச 4 11 18 25
Archive 2022 2023
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest in Prayers

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.