Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 1, 2022

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 1, 2022

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

பொதுக்காலம் 18ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

அனனியாவே, கூர்ந்து கேள்: ஆண்டவர் உன்னை அனுப்பவில்லை. அப்படியிருந்தும் இம்மக்கள் பொய்யை நம்பும்படி நீ செய்துவிட்டாய்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 28: 1-17

யூதாவின் அரசனான செதேக்கியாவினுடைய ஆட்சியின் நான்காம் ஆண்டு ஐந்தாம் மாதத்தில் அசூரின் மகனும் கிபயோனைச் சார்ந்தவனுமான அனனியா என்னும் இறைவாக்கினன் ஆண்டவரின் இல்லத்தில் குருக்கள் மற்றும் மக்கள் அனைவருடைய முன்னிலையிலும் என்னிடம் உரைத்தது:

“இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘பாபிலோனிய மன்னனது நுகத்தை நான் முறித்தெறிந்து விட்டேன். பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் இவ்விடத்தினின்று கவர்ந்து, பாபிலோனுக்கு எடுத்துச் சென்றுள்ள ஆண்டவரது இல்லத்தின் கலங்கள் எல்லாவற்றையும் இரண்டே ஆண்டுக் காலத்திற்குள் இவ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவருவேன். அத்தோடு யோயாக்கிமின் மகனும் யூதாவின் அரசனுமான எக்கோனியாவையும் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட யூதா மக்கள் அனைவரையும் இவ்விடத்துக்கு நான் திரும்பக் கொண்டு வருவேன். ஏனெனில், பாபிலோனிய மன்னனது நுகத்தை நான் முறித்தெறிவேன்’, என்கிறார் ஆண்டவர்.”

அப்பொழுது ஆண்டவரின் இல்லத்தில் நின்று கொண்டிருந்த குருக்கள், மக்கள் அனைவர் முன்னிலையிலும், இறைவாக்கினர் எரேமியா இறைவாக்கினன் அனனியாவிடம் பேசினார். இறைவாக்கினர் எரேமியா அவனை நோக்கி, ‘ஆமென்! ஆண்டவர் அவ்வாறே செய்வாராக! நீர் உரைத்த சொற்களை ஆண்டவர் நிறைவேற்றுவாராக! ஆண்டவர் இல்லத்தின் கலங்களையும் நாடுகடத்தப்பட்டோர் அனைவரையும் பாபிலோனிலிருந்து இவ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவருவாராக! ஆயினும் உம் செவிகளிலும் மக்கள் அனைவரின் செவிகளிலும் விழும்படி நான் உரைக்கும் இச்சொல்லைக் கவனித்துக் கேளும். உமக்கும் எனக்கும் முன்பே பண்டைய நாள்களில் வாழ்ந்த இறைவாக்கினர், பல நாடுகள், பேரரசுகளுக்கு எதிராகப் போர், துன்பம், கொள்ளைநோய் ஆகியவை பற்றி இறைவாக்கு உரைத்திருக்கின்றனர். நல்வாழ்வை முன்னறிவிக்கும் இறைவாக்கினரைப் பொறுத்தவரை, அவரது வாக்கு நிறைவேறும் பொழுதுதான், ஆண்டவர் அவரை உண்மையாகவே அனுப்பியுள்ளார் என்பது தெரியவரும்” என்றார்.

அதைக் கேட்ட இறைவாக்கினன் அனனியா இறைவாக்கினர் எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தைப் பிடுங்கி முறித்தெறிந்தான். மேலும், அனனியா எல்லா மக்கள் முன்னிலையிலும், “ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் நுகத்தை இன்னும் இரண்டே ஆண்டுகளில் மக்களினத்தார் அனைவருடைய கழுத்தினின்றும் பிடுங்கி முறித்தெறிவேன்” என்றான். உடனே இறைவாக்கினர் எரேமியா அவ்விடம் விட்டு அகன்றார்.

இறைவாக்கினன் அனனியா இறைவாக்கினர் எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தை முறித்தெறிந்த சில நாள்களுக்குப் பின்னர், ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது: “நீ போய் அனனியாவிடம் சொல்: ஆண்டவர் கூறுவது இதுவே: நீ மர நுகத்தை முறித்தெறிந்தாய்; அதற்குப் பதிலாக இரும்பு நுகத்தைச் செய்துகொள்வாய். ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இந்த மக்களினத்தார் அனைவரின் கழுத்தில் இரும்பு நுகத்தை வைத்துள்ளேன். ஆதலால் அவர்கள் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசருக்கு அடிபணிந்து பணிவிடை செய்வார்கள். காட்டு விலங்குகளையும் அவனிடம் ஒப்புவித்திருக்கிறேன்.”

அப்பொழுது இறைவாக்கினர் எரேமியா இறைவாக்கினன் அனனியாவிடம் கூறியது: “அனனியாவே, கூர்ந்து கேள்: ஆண்டவர் உன்னை அனுப்பவில்லை. அப்படியிருந்தும் இம்மக்கள் பொய்யை நம்பும்படி நீ செய்துவிட்டாய். எனவே, ஆண்டவர் கூறுகிறார்: இதோ! நான் இவ்வுலகினின்றே உன்னை அனுப்பி வைக்கப் போகிறேன். ஆண்டவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யுமாறு நீ போதித்ததால், இந்த ஆண்டிலேயே நீ சாவாய்!” அவ்வாறே அதே ஆண்டு ஏழாம் மாதத்தில் இறைவாக்கினன் அனனியா மாண்டான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 119: 29,43. 79,80. 95,102 . (பல்லவி: 68b)

பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும்.

29பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும்.

43என் வாயினின்று உண்மையின் சொற்கள் நீங்கவிடாதேயும்; ஏனெனில், உம் நீதிநெறிகள் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன். – பல்லவி

79உமக்கு அஞ்சி நடப்போர், உம் ஒழுங்குமுறைகளைப்பற்றிய அறிவுடையோர் என் பக்கம் திரும்புவாராக!

80உம் நியமங்களைப் பொறுத்த மட்டில் என் உள்ளம் மாசற்றதாய் இருப்பதாக! அதனால், நான் வெட்கமுறேன். – பல்லவி

95தீயோர் என்னை அழிக்கக் காத்திருக்கின்றனர்; நானோ உம் ஒழுங்குமுறைகளை ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.

102உம் நீதிநெறிகளை விட்டு நான் விலகவில்லை; ஏனெனில், நீர்தாமே எனக்குக் கற்றுத் தந்தீர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 4b

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 13-21

அக்காலத்தில்

திருமுழுக்கு யோவான் கொலையுண்டதைக் கேள்வியுற்ற இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவு கொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்.

மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்” என்றனர். இயேசு அவர்களிடம், “அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார். ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, “எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை” என்றார்கள். அவர், “அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்” என்றார்.

மக்களைப் புல் தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்; அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலாக உணவு உண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

The readings on this page are taken from the Douay-Rheims Catholic Bible. You can also read the Mass Readings taken from the New Jerusalem Bible, which is used at Mass in most of the English-speaking world. (References, Copyrights).
ஆகஸ்ட்-2022 செப் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22 29
செ 2 9 16 23 30
பு 3 10 17 24 31
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2022 2023
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest in Prayers

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.