புனித வென்செஸ்லாஸ் – மறைச்சாட்சி
முதல் வாசகம்
யாருக்கும் நீங்கள் அஞ்சி நடுங்கவோ மனங்கலங்கவோ வேண்டாம்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 14-17
அன்பிற்குரியவர்களே,
நீதியின் பொருட்டுத் துன்புற வேண்டியிருப்பினும் நீங்கள் பேறுபெற்றவர்களே. யாருக்கும் நீங்கள் அஞ்சி நடுங்கவோ மனங்கலங்கவோ வேண்டாம்.
உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள். ஆனால், பணிவோடும் மரியாதையோடும் விடை அளியுங்கள். உங்கள் மனச்சான்றும் குற்றமற்றதாய் இருக்கட்டும். அப்பொழுது உங்கள் கிறிஸ்தவ நன்னடத்தையைப் பழிக்கிறவர்கள் உங்களை இழிவாகப் பேசியதைக் குறித்து வெட்கப்படுவார்கள்.
ஏனெனில், தீமை செய்து துன்புறுவதை விட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 . (பல்லவி: 5)
பல்லவி: கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.
1சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர்போல இருந்தோம்.
2abஅப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. – பல்லவி
2cd“ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்” என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
3ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். – பல்லவி
4ஆண்டவரே, தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.
5கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். – பல்லவி
6விதை எடுத்துச் செல்லும்போது – செல்லும்போது – அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது – வரும்போது – அக்களிப்போடு வருவார்கள். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 5: 10
அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 34-39
அக்காலத்தில்
இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கூறியது: “நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.
என்னை விடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். என்னை விடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.
தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.