புனித ஜான் மரிய வியான்னி – மறைப்பணியாளர்
முதல் வாசகம்
நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்குக் காவலனாக நியமித்துள்ளேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 3: 16-21
அந்நாள்களில்
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்குக் காவலனாக நியமித்துள்ளேன். என் வாயின் சொற்களைக் கேட்டு அவர்களை என் பெயரால் எச்சரிக்கை செய். தீயோரிடம் ‘நீங்கள் சாவது உறுதி’ என்று நான் சொல்ல, நீ அவர்களை எச்சரிக்காவிடில் – அத்தீயோர் தம் தீய வழியினின்று விலகாவிட்டால், தம் உயிரை அவர்களால் காத்துக்கொள்ள இயலாது என்று அவர்களை எச்சரிக்காவிட்டால் – அவர்கள் தம் குற்றப்பழியோடு சாவர். ஆனால் அவர்களது இரத்தப் பழியை உன் மேலேயே சுமத்துவேன். மாறாக, நீ தீயோரை எச்சரித்திருந்தும், அவர்கள் தம் தீச்செயலினின்றும் தம் தீய வழியினின்றும் விலகாமல் இருந்தால், அவர்கள் தம் குற்றப்பழியோடு சாவர். நீயோ உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.
நேர்மையாளர் தம் நேர்மையினின்று விலகி, அநீதி செய்கையில் நான் அவர்கள் முன் இடறலை வைக்க, அவர்கள் சாவர். நீ அவர்களை எச்சரிக்காதிருந்தால் அவர்கள் தம் பாவத்திலேயே சாவர்; அவர்களுடைய நற்செயல்கள் நினைக்கப்படமாட்டா. ஆனால் அவர்களது இரத்தப்பழியை உன் மேலேயே சுமத்துவேன்.
மாறாக, நேர்மையாளர் பாவம் செய்யாதபடி நீ அவர்களை எச்சரித்ததால் அவர்கள் பாவம் செய்யாவிடில், அவர்கள் வாழ்வது உறுதி. நீயும் உன் உயிரைக் காத்துக்கொள்வாய்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 117: 1. 2 . (பல்லவி: மாற் 16:15)
பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
அல்லது: அல்லேலூயா.
1பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! – பல்லவி
2ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. அல்லேலூயா! – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 4: 18-19 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிடவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
திரண்டிருந்த மக்களை இயேசு கண்டபோது, அவர்கள்மேல் பரிவு கொண்டார்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 35- 10: 1
அக்காலத்தில்
இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்.
அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.
இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.