back to top
Home Blog Page 242

திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 4, 2022 – வ2

அசிசி நகர் புனித பிரான்சிஸ்

நினைவு
புனிதர், புனிதையர் – பொது (துறவியர்)

முதல் வாசகம்

என்னைப் பொறுத்த வரையில், உலகைப் போல் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 14-18

சகோதரர் சகோதரிகளே,

நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்த வரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்த வரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.

விருத்தசேதனம் செய்துகொள்வதும் செய்துகொள்ளாமல் இருப்பதும் ஒன்றே. புதிய படைப்பாவதே இன்றியமையாதது. இந்தக் கொள்கையைப் பின்பற்றுவோருக்கும் கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக! இனிமேல் எவரும் எனக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம். ஏனெனில் என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.

சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 16: 1-2a,5. 7-8. 11 . (பல்லவி: 5a)

பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.

1இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

2aநான் ஆண்டவரிடம் நீரே என் தலைவர் என்று சொன்னேன்.

5ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. – பல்லவி

7எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.

8ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். – பல்லவி

11வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-30

அக்காலத்தில்

இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.

என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.

மேலும் அவர், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.

ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர்-2022 நவ ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 4, 2022

பொதுக்காலம் 27ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

பிற இனத்தவர்க்கு நற்செய்தியை அறிவிக்குமாறு திருவுளங்கொண்டார்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 13-24

சகோதரர் சகோதரிகளே,

பவுல் ஆகிய நான் யூத நெறியைப் பின்பற்றி வந்த காலத்தில் எவ்வாறு நடந்துகொண்டேன் என்பதுபற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடவுளின் திருச்சபையை மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி ஒழிக்க முயன்றேன். மூதாதையர் மரபுகளில் ஆர்வம் மிக்கவனாய் என் இனத்தவருள் என் வயதினர் பலரைவிட யூத நெறியில் சிறந்து விளங்கினேன். ஆனால் தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கிவைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள், தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார். அப்போது நான் எந்த மனிதரிடமும் போய்க் கலந்து பேசவில்லை. எனக்கு முன் திருத்தூதர்களாய் இருந்தவர்களைக் காண எருசலேமுக்குப் போகவுமில்லை. ஆனால் உடனே அரேபியாவுக்குச் சென்றேன். அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப் போனேன். அங்கே பதினைந்து நாள் அவரோடு தங்கியிருந்தேன். ஆண்டவரின் சகோதரரான யாக்கோபைத் தவிர திருத்தூதருள் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை. நான் உங்களுக்கு எழுதுவதில் பொய் ஒன்றுமில்லை; இதற்குக் கடவுளே சாட்சி!

பிறகு நான் சிரியா, சிலிசியப் பகுதிகளுக்குச் சென்றேன். ஆயினும் யூதேய நாட்டிலிருந்த கிறிஸ்தவச் சபைகளுக்கு அதுவரை அறிமுகம் ஆகாமலேயே இருந்தேன். “ஒரு காலத்தில் தங்களைத் துன்புறுத்தியவன், தான் முன்பு ஒழிக்க முயன்ற விசுவாசத்தை இப்பொழுது நற்செய்தியாக அறிவிக்கிறான்” என்று மட்டும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். அதற்காக என் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 139: 1-3. 13-14. 15 . (பல்லவி: 24b)

பல்லவி: என்றும் உள்ள வழியில் என்னை நடத்தியருளும் ஆண்டவரே.

1ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!

2நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.

3நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. – பல்லவி

13ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே!

14அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். – பல்லவி

15என் எலும்பு உமக்கு மறைவானதன்று; மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மார்த்தா அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுடன் ஓர் ஊருக்குச் சென்றார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்றார்.

ஆண்டவர் அவரைப் பார்த்து, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர்-2022 நவ ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 3, 2022

பொதுக்காலம் 27ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக நற்செய்தி எனக்குக் கிடைத்தது.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 6-12

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்துவின் பொருட்டு அருள்கூர்ந்து உங்களை அழைத்த அவரை விட்டுவிட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் வேறு ஒரு நற்செய்தியை ஏற்றுக்கொண்டுவிட்டீர்களே! எனக்கே வியப்பாய் இருக்கிறது. வேறு ஒரு நற்செய்தி இருக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை. மாறாகச் சிலர் உங்கள் மனத்தைக் குழப்பிக் கிறிஸ்துவின் நற்செய்தியைத் திரித்துக் கூற விரும்புகின்றனர் என்பதுதான் உண்மை. நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ, விண்ணிலிருந்து வந்த தூதரோ, யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக! ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம்; இப்பொழுது மீண்டும் சொல்கிறேன்: நீங்கள் பெற்றுக்கொண்ட நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை யாராவது உங்களுக்கு அறிவித்தால் அவர்கள் சபிக்கப்படுக! இப்படிப் பேசும்போது நான் நாடுவது மனிதருடைய நல்லெண்ணமா? கடவுளுடைய நல்லெண்ணமா? நான் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கவா பார்க்கிறேன்? நான் இன்னும் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கப் பார்த்தால் கிறிஸ்துவுக்குப் பணியாளனாய் இருக்க முடியாது.

சகோதரர் சகோதரிகளே, உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்: நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து வந்ததல்ல. எந்த மனிதரிடமிருந்தும் நான் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை; எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. மாறாக இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 111: 1-2. 7-8. 9,10c . (பல்லவி: 5b)

பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்.

அல்லது: அல்லேலூயா.

1நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன்.

2ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். – பல்லவி

7அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள் நம்பிக்கைக்குரியவை; நீதியானவை; அவர்தம் கட்டளைகள் அனைத்தும் நிலையானவை.

8என்றென்றும் எக்காலமும் அவை நிலைமாறாதவை; உண்மையாலும் நீதியாலும் அவை உருவானவை. – பல்லவி

9தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்; தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்; அவரது திருப்பெயர் தூயது; அஞ்சுதற்கு உரியது.

10cஅவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

எனக்கு அடுத்திருப்பவர் யார்?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 25-37

அக்காலத்தில்

திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்று எழுதியுள்ளது” என்றார். இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” என்றார்.

அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார்.

அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: “ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறுபக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.

ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டு போய் அவரைக் கவனித்துக்கொண்டார்.

மறுநாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக்கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்” என்றார்.

“கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்டார். அதற்குத் திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே” என்றார். இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர்-2022 நவ ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 2, 2022

பொதுக்காலம் 27ஆம் வாரம் – ஞாயிறு

முதல் வாசகம்

நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.

இறைவாக்கினர் அபக்கூக்கு நூலிலிருந்து வாசகம் 1: 2-3, 2: 2-4

ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணைவேண்டிக் கூக்குரலிடுவேன்; நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்புவேன்; நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்?

நீர் என்னை ஏன் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினைக் காணச் செய்கின்றீர்? கொள்ளையும் வன்முறையும் என் கண்முன் நிற்கின்றன; வழக்கும் வாதும் எழும்புகின்றன.

ஆண்டவர் எனக்கு அளித்த மறுமொழி இதுவே: “காட்சியை எழுதிவை; விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுது. குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது; முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது. ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால், எதிர்பார்த்துக் காத்திரு; அது நிறைவேறியே தீரும்; காலம் தாழ்த்தாது. இதை நம்பாதவரே உள்ளத்திலே நேர்மையற்றவராய் இருப்பர்; நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 95: 1-2. 6-7. 8-9 . (பல்லவி: 8b)

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

1வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.

2நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். – பல்லவி

6வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.

7அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! – பல்லவி

8அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்தது போல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

9அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். – பல்லவி

இரண்டாம் வாசகம்

நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்து வெட்கமடையத் தேவை இல்லை.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 6-8, 13-14

அன்பிற்குரியவரே,

உன்மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன். கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்.

கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு என்னிடம் நீ கேட்ட நலந்தரும் வார்த்தைகளை மேல்வரிச் சட்டமாகக் கொள். நமக்குள் குடிகொள்ளும் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக்கொள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 பேது 1: 25

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்…

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 5-10

அக்காலத்தில்

திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், ‘நீர் உடனே வந்து உணவருந்த அமரும்’ என்று உங்களில் எவராவது சொல்வாரா? மாறாக, ‘எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக் கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன் பிறகு நீர் உண்டு குடிக்கலாம்’ என்று சொல்வாரல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ?

அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர்-2022 நவ ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 1, 2022 – வ2

குழந்தை இயேசுவின் புனித தெரேசா – கன்னியர்

நினைவு
கன்னியர் – பொது அல்லது புனிதர், புனிதையர் – பொது (துறவியர்)

முதல் வாசகம்

ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 10-14c

எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்; அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள். அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்.

ஆண்டவர் கூறுவது இதுவே: ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்; நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்.

இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும், உங்கள் எலும்புகள் பசும்புல் போல் வளரும்; ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 131: 1. 2. 3

பல்லவி: ஆண்டவரே நான் அமைதியாய் இருக்க, என் உயிரைக் காத்தருளும்.

1ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை; என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. – பல்லவி

2மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாய் உள்ளது. – பல்லவி

3இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5

அக்காலத்தில்,

சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர்-2022 நவ ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 1, 2022

பொதுக்காலம் 26ஆம் வாரம் – சனி

முதல் வாசகம்

என் கண்களே உம்மைக் காண்கின்றன. ஆகையால் என்னையே நொந்து கொள்ளுகின்றேன்.

யோபு நூலிலிருந்து வாசகம் 42: 1-3, 5-6, 12-17

யோபு ஆண்டவர்க்குக் கூறிய பதில்: நீர் அனைத்தையும் ஆற்ற வல்லவர்; அறிவேன் அதனை; நீர் நினைத்த எதையும் தடுக்க இயலாது. ‘அறிவில்லாமல் ஆலோசனையை மறைப்பவன் எவன்?’ என்று கேட்டீர்; உண்மையில் நான்தான் புரியாதவற்றைப் புகன்றேன்; அவை எனக்கு விளங்கா அளவுக்கு விந்தையானவை. உம்மைப் பற்றிக் காதால் மட்டுமே கேள்விப்பட்டேன். ஆனால் இப்பொழுது, என் கண்களே உம்மைக் காண்கின்றன. ஆகையால் என்னையே நொந்து கொள்ளுகின்றேன்; புழுதியிலும் சாம்பலிலும் இருந்து மனம் வருந்துகின்றேன்.

யோபின் முன்னைய நாள்களில் இருந்ததைவிட, பின்னைய நாள்களில் ஆண்டவர் அதிகமாக ஆசி வழங்கினார். இப்பொழுது பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் பெட்டைக் கழுதைகளும் அவருக்கு இருந்தன. அவருக்கு ஏழு புதல்வர்களும் மூன்று புதல்வியரும் பிறந்தனர். மூத்த மகளுக்கு எமிமா என்றும் இரண்டாவது மகளுக்குக் கெட்டிசியா என்றும், மூன்றாவது மகளுக்குக் கெரேன் அப்பூக்கு என்றும் பெயரிட்டார். யோபின் புதல்வியரைப் போல் அழகுவாய்ந்த நங்கையர் நாடெங்கும் இருந்ததில்லை. அவர்களின் தந்தை, அவர்களின் சகோதரர்களோடு அவர்களுக்கும் சொத்தில் உரிமை கொடுத்தார்.

அதன்பின் யோபு நூற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தார்; தம் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் நான்காம் தலைமுறை வரை கண்டுகளித்தார். இவ்வாறு யோபு முதுமை அடைந்து, பல்லாண்டு வாழ்ந்து இறந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 119: 66,71. 75,91. 125,130 . (பல்லவி: 135a)

பல்லவி: உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச்செய்யும்!

66நன்மதியையும் அறிவாற்றலையும் எனக்குப் புகட்டும்; ஏனெனில், உம் கட்டளைகள் மீது நம்பிக்கை வைக்கின்றேன்.

71எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே; அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன். – பல்லவி

75ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகள் நேரியவை என அறிவேன்; நீர் என்னைச் சிறுமைப்படுத்தியது சரியே.

91உம் ஒழுங்குமுறைகளின்படியே அனைத்தும் இன்றுவரை நிலைத்துள்ளன; ஏனெனில், அவை உமக்கு ஊழியம் செய்கின்றன. – பல்லவி

125உம் ஊழியன் நான், எனக்கு நுண்ணறிவு புகட்டும்; அப்போது உம் ஒழுங்குமுறைகளை அறிந்து கொள்வேன்.

130உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-24

அக்காலத்தில்

அனுப்பப்பட்ட எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பி வந்து, “ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன” என்றனர். அதற்கு அவர், “வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப் பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்” என்றார்.

அந்நேரத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகை அடைந்து, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்” என்றார். “என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.

பின்பு அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக, “நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர். ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள்; ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர்-2022 நவ ►
ஞா 30 2 9 16 23
தி 31 3 10 17 24
செ 4 11 18 25
பு 5 12 19 26
வி 6 13 20 27
வெ 7 14 21 28
1 8 15 22 29
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 30, 2022 – வ2

புனித எரோணிமுஸ் (ஜெரோம்) – மறைப்பணியாளர், மறைவல்லுநர்

நினைவு
மறைவல்லுநர் – பொது அல்லது மறைப்பணியாளர் – பொது

முதல் வாசகம்

மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 14-17

அன்பிற்குரியவரே,

நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்; யாரிடம் கற்றாய் என்பது உனக்குத் தெரியுமே. நீ குழந்தைப் பருவம் முதல் திருமறை நூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழிநடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது.

மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 119: 9-10. 11-12. 13-14 . (பல்லவி: 12b)

பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.

9இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ?

10முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலகவிடாதேயும். – பல்லவி

11உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.

12ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும். – பல்லவி

13உம் வாயினின்று வரும் நீதித்தீர்ப்புகளை எல்லாம் என் இதழால் எடுத்துரைக்கின்றேன்.

14பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவது போல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திப 16: 14b காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் திருமகன் கூறியதை ஏற்றுக்கொள்ளுமாறு எங்கள் உள்ளத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

புதியவையும் பழையவையும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 47-52

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: “விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையே இருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.”

“இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?” என்று இயேசு கேட்க, அவர்கள் “ஆம்” என்றார்கள்.

பின்பு அவர், “ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்” என்று அவர்களிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 30, 2022

பொதுக்காலம் 26ஆம் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்

காலைப்பொழுதுக்குக் கட்டளையிட்டதுண்டா? கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா?

யோபு நூலிலிருந்து வாசகம் 38: 1, 12-21; 40: 3-4

ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்:

உன் வாழ்நாளில் காலைப்பொழுதுக்குக் கட்டளையிட்டதுண்டா? வைகறையைத் தன் இடமறிய வைத்ததுண்டா? இவ்வாறு, அது வையக விளிம்பைத் தொட்டிழுத்து, பொல்லாதவரை அதனுள்ளிருந்து உதறித் தள்ளுமே! முத்திரையால் களிமண் உருப்பெறுவதுபோல் மண்ணகம் வண்ணம் ஏற்றிய ஆடையாயிற்று. அப்போது, கொடியவரிடமிருந்து ஒளி பறிக்கப்படும்; அடிக்க ஓங்கிய கை முறிக்கப்படும்.

கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா? ஆழியின் அடியில் நீ உலவினதுண்டோ? சாவின் வாயில்கள் உனக்குக் காட்டப்பட்டனவோ? இருள் உலகின் கதவுகளைக் கண்டதுண்டோ நீ? அவனியின் பரப்பை நீ ஆய்ந்தறிந்ததுண்டா? அறிவிப்பாய் அதிலுள்ள அனைத்தையும் அறிந்திருந்தால்!

ஒளி உறைவிடத்திற்கு வழி எதுவோ! இருள் இருக்கும் இருப்பிடம் எங்கேயோ? அதன் எல்லைக்கு அதனை அழைத்துப் போவாயோ? அதன் உறைவிடத்திற்கு நேர்வழி அறிவாயோ! ஆம், அறிவாய்; அன்றே நீ பிறந்தவனன்றோ! ஆமாம்; ஆண்டுகளும் உனக்கு அதிகமன்றோ!

யோபு ஆண்டவர்க்குக் கூறிய மறுமொழி: இதோ! எளியேன் யான் இயம்புதற்குண்டோ? என் வாயைக் கையால் பொத்திக் கொள்வேன். ஒருமுறை பேசினேன்; மறுமொழி உரையேன்; மீண்டும் பேசினேன்; இனிப் பேசவே மாட்டேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 139: 1-3. 7-8. 9-10. 13-14ab . (பல்லவி: 24b)

பல்லவி: இறைவா! என்றும் உள்ள வழியில் என்னை நடத்துவீர்.

1ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!

2நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.

3நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. – பல்லவி

7உமது ஆற்றலை விட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்?

8நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்! – பல்லவி

9நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும்,

10அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்; உமது வலக்கை என்னைப் பற்றிக்கொள்ளும். – பல்லவி

13ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே!

14abஅஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 95: 8b, 7b

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16

அக்காலத்தில்

இயேசு கூறியது: “கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால், அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து, மனம் மாறியிருப்பர். எனினும் தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும். கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய்.

உங்களுக்குச் செவிசாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 29, 2022

தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் – அதிதூதர்கள்

விழா

முதல் வாசகம்

பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10, 13-14

நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன.

இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டுவரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 12: 7-12a

விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்; அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள். அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று. அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது; அதன் தூதர்களும் அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள்.

பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது: “இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன. நம் சகோதரர் சகோதரிகள் மீது குற்றம் சுமத்தியவன், நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும் அவர்கள் மீது குற்றம் சாட்டியவன் வெளியே தள்ளப்பட்டான். ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தாலும் தாங்கள் பகர்ந்த சான்றாலும் அவர்கள் அவனை வென்றார்கள். அவர்கள் தங்கள் உயிர்மீது ஆசை வைக்கவில்லை; இறக்கவும் தயங்கவில்லை. இதன் பொருட்டு விண்ணுலகே, அதில் குடியிருப்போரே, மகிழ்ந்து கொண்டாடுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 138: 1-2a. 2b-3. 4-5 . (பல்லவி: 1c)

பல்லவி: ஆண்டவரே! தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.

1ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.

2aஉம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள்பணிவேன். – பல்லவி

2bஉம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.

3நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். – பல்லவி

4ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர்.

5ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 103: 21

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 47-51

அக்காலத்தில்

நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார். நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.

அதற்கு இயேசு, “உம்மை அத்தி மரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார். மேலும் “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 28, 2022 – வ2

புனித வென்செஸ்லாஸ் – மறைச்சாட்சி

வி.நினைவு
மறைச்சாட்சியர் – பொது

முதல் வாசகம்

யாருக்கும் நீங்கள் அஞ்சி நடுங்கவோ மனங்கலங்கவோ வேண்டாம்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 14-17

அன்பிற்குரியவர்களே,

நீதியின் பொருட்டுத் துன்புற வேண்டியிருப்பினும் நீங்கள் பேறுபெற்றவர்களே. யாருக்கும் நீங்கள் அஞ்சி நடுங்கவோ மனங்கலங்கவோ வேண்டாம்.

உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள். ஆனால், பணிவோடும் மரியாதையோடும் விடை அளியுங்கள். உங்கள் மனச்சான்றும் குற்றமற்றதாய் இருக்கட்டும். அப்பொழுது உங்கள் கிறிஸ்தவ நன்னடத்தையைப் பழிக்கிறவர்கள் உங்களை இழிவாகப் பேசியதைக் குறித்து வெட்கப்படுவார்கள்.

ஏனெனில், தீமை செய்து துன்புறுவதை விட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 . (பல்லவி: 5)

பல்லவி: கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.

1சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர்போல இருந்தோம்.

2abஅப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. – பல்லவி

2cd“ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்” என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

3ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். – பல்லவி

4ஆண்டவரே, தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.

5கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். – பல்லவி

6விதை எடுத்துச் செல்லும்போது – செல்லும்போது – அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது – வரும்போது – அக்களிப்போடு வருவார்கள். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 10

அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 34-39

அக்காலத்தில்

இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கூறியது: “நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.

என்னை விடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். என்னை விடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.

தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023

Stay Connected

811,367FansLike
205FollowersFollow
14,400SubscribersSubscribe
Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks